Friday, December 26, 2025

பக்தி - மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் - NEELAKANDA DIXITHAR

 மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர்
-----------------

தெய்வங்கள் சிலை, மன்னர் சிலை, சாதுக்கள் சிலை அரச குடும்ப சிலை வழுவில்லாமல் பழுதில்லாமல் வடிக்கவேண்டும் என்பது விதி, இதனால் முதல்முறை அந்த சிலையினை எடுத்துவிட்டு வேறு கல்லில் வடித்தான் சிற்பி.

அதே தவறு மீண்டும் நிகழ்ந்தது, அவன் அதிர்ந்து போனான் மூன்றாம் முறை அவன் எவ்வளவோ கவனமாயிருந்தும் அவனை மீறி அதே தவறு உளிபட்டு நடந்தது.

எந்த சிலையிலும் வராத தவறு பட்டத்து ராணி சிலையில் அதுவும் இடது தொடையில் மட்டும் வருவது ஏன் அன அஞ்சியவன் நீலகண்ட தீட்சிதரிடம் நடந்ததை சொன்னான். காரணம் இதற்கு மேல் செதுக்க கல்லுமில்லை! வழியுமில்லை! இனி மண்டபத்தையே இடித்து கட்டினால்தான் உண்டு, எனுமளவு வேலை முடிந்த நேரம்.

அவன் சிக்கலை அப்படியே நீலகண்டரிடம் சொன்னான் அவர் சொன்னார் "சிற்பியே, சில நேரம் மானிட தவறுகளே இறைவனி விருப்பமுமாகும். நாம் அதை நம் தவறு என நினைத்தாலும் அங்கு தெய்வமே செயலாற்றும்.

இது திரும்ப திரும்ப நடக்கிறது என்றால் அப்படியே இருக்கட்டும்" என சொல்லிவிட்டார்.  சிற்பியோ மன்னன் கேட்டால் என்ன சொல்வது என மருவினான் "நான் சொன்னேன் என சொல்" என மட்டும் சொன்னார் நீலகண்ட தீட்சிதர்.

அவருக்கு உண்மை தெரிந்தது ஒரு பெண்ணுக்கு இடது தொடையில் மச்சம் இருப்பின் தெய்வாம்சம் பொருந்திய ராஜ அரியணையில் இருப்பாள் இது சாமுத்திரிகா லட்சணம் சொல்லும் உண்மை. இதை அவர் முழுக்க அறிந்திருந்ததால் அவர் இதுவே அன்னையின் விருப்பம், ராணிக்கும் மச்சம் அப்படி இருந்திருக்கலாம் என தனக்குள் சொல்லி கொண்டார்.

அந்த சிலையில் தொடையின் தழும்பு அப்படியே இருந்தது.

மன்னர் திருமலை நாயக்கன் மண்டபத்தை சுற்றிபார்க்க வந்தான். அப்போது தன் சிலையினை கண்டு ரசித்தவன் இதர மனைவியர் சிலையினை பார்த்து புன்னகைத்தான், அப்படியே அந்த பட்டத்து ராணி தொடையில் இருந்த அந்த அடையாளம் கண்டு அதிர்ந்தவன் அதை வெளிகாட்டவில்லை. அது அப்படியே அவள் தொடையில் இருந்த மச்சம்போல் இருந்தது.

எப்படி இவனுக்கு இந்த ரகசியம் தெரிந்தது என அதிர்ச்சி அடைந்தவன் இந்த தழும்பு எப்படி வந்தது என தெரியாதவன் போல் கேட்டான். சிற்பியோ "இதெல்லாம் நீலகண்ட சாஸ்திரிக்கு தெரியும்" என பதிலளித்துவிட்டு தான் தப்பியதாக எண்ணிகொண்டான்.

மன்னன் எங்கும் அதிகம் பேசகூடாது அதுவும் ஊழியர்களிடம் வாதாட கூடாது என்பது விதி. இதனால் அந்த இடத்தினைவிட்டு அகன்றவன் தனக்கும் ராணிக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் எப்படி தீட்சிதர்க்கு தெரிந்தது என கடுமையாக சிந்தித்தான். அவன் மனதில்  சிவன் கழுத்தில் இருந்த ஆலகால விஷம் பரவிற்று.

அன்னை தன் பக்தனை மிகபெரிய இடத்துக்கு உயர்த்த இதை செய்கின்றாள் என்பதை அறியாதவன் தீட்சிதர்மேல் பெரும் சந்தேகம் கொண்டான். எப்படியோ பட்டத்து ராணியினை இவர் தவறாக பார்த்திருக்கின்றார் என முடிவெடுத்தவன் அவர் கண்களை பொசுக்கும்படி தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

சேகவர்கள் அதிர்ந்து போனார்கள், கொடிய எதிரிக்கு செய்யும் கடும் தண்டனை நாட்டின் முதலமைச்சருக்கு அதுவும் தெய்வீக மனிதருக்கா என மிரண்டு போனார்கள். ஆனாலும் மன்னன் உத்தரவை நிறைவேற்ற அவர் இல்லம் செல்ல முடிவெடுத்தார்கள். கைகளில் இரும்பு கம்பியும் அதை பழுக்கவைக்க சில ஆயத்தங்களுடன் சிலர் கிளம்பினார்கள்.

முற்றும் உணர்ந்த சித்த நிலையில் இருந்த நீலகண்டர் தன் யோகத்தால் நடந்ததை நடக்க இருப்பதை கண்டார், "தாயே நான் அறிந்து செய்த பிழை இல்லை இது என் கர்மவினை, மன்னன் வந்து என் கண்களை பறித்தால் அது என் தவறு என்றாகிவிடும் நானே முந்தி கொள்கின்றேன்" என்றவர் இரு கற்புறத்தை ஏற்றி அனைக்கு காட்டியவர் சட்டென "தாயே மீனாட்சி" என்றபடி கண்களை திறந்து உள்ளே இட்டுகொண்டார்.

அவரின் கண்கள் எரிந்து குருடாயின, அவர் அழவுமில்லை ஆர்பரிக்கவுமில்லை. எல்லாம் கடந்த உடலை கடந்த ஞானநிலையில் இருந்தவர். கண் என்பது மானிட உடலுக்கு தேவை அன்றி ஆத்மாவுக்கு தேவையில்லை என்பதுபோல் அமர்ந்திருந்தார்.

நடந்ததை சேவகர்கள் சொல்ல மன்னன் அதிர்ந்தே போனான், இது எப்படி வெளிதெரிந்தது என்பதில் குழம்பி போனான். காரணம் அவன் உத்தரவிட்டதும் சேவகர்கள் சென்றார்கள் அதற்குள் அவரே தன்னை குருடாக்கியது எப்படி? அப்படியானால் அவருக்கு தான் மனதால் உணர்ந்து தெரிந்தது எப்படி என திகைத்து போனான்.

அவன் அவசரமாக அன்னையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவரை சந்திக்க முடிவெடுத்து மீனாட்சி சன்னதிக்கு சென்றபோதுதான் அந்த பெரும் அதிசயம் நடந்தது, சேவகர்களே மிரண்டார்கள்.

ஆம், அந்த சன்னதிமுன் குருடனாய் அமர்ந்திருந்தார் நீலகண்ட தீட்சிதர், அவரை பொறுத்தவரை அவர் தன் வீட்டில் மீனாட்சி சிலை முன் கண்ணை குருடாக்கினார், இப்போது எங்கிருக்கின்றோம் என்பது அவருக்கும் தெரியாது.

மன்னன் அவரை நோக்கி பெரும் வருத்தத்துடன் அடியெடுத்து வைக்கும்போது அவர் உருக்கமாக பாட துவங்கினார் கண் தெரியா நிலையிலும் மனதில் இருந்த மீனாட்சி திருக்கோலம்கொண்டு பாதம் முதல் தலைவரை அவளை துதித்து "பாதகேசிதம்" பாடினார்.

பின் தீர்க்கமாக சொன்னார் "அன்னையே, இது என் கர்மவினையால் நடந்தது, என் கர்மத்தின் பெரும் பாதிப்புபடி மன்னனால் நான் குருடாக வேண்டும் என்றது. இன்று நடந்தது, என் கர்மவினையினை கழிக்கவே நீ என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றாய். இதனால் உன் கோவிலுக்கு திருப்பணி செய்துமுடித்தபின் என் கண்ணையும் வாங்கி கொண்டாய்.

என் கர்மம் முடித்த நிறைவில் நான் பாடுகின்றேன் ஏற்றுகொள்" என சொல்லி தன் நிலையினை சொல்லி பாடினார்.

அவர் பாட பாட எல்லோரும் உருகி போனார்கள், மன்னன் மனம் கசிந்தான், தெய்வீக சக்தியால் அங்கு வந்த அனைவரும் சொக்கி போனார்கள்.

அவர் 60 பாடல்களை பாடி, 61-ம் பாடலை இப்படி பாடினார்.

செய்யாத அழகினவாய்த் திப்பியமாய்

அறிவிக்கும் சேய ஆகிப்

பொய்யாமல் மங்களமாய் யாவைக்கும் மேலாம்உன் பொற்றாட் பூவை

மையார்ந்த மனத்தடியேன் பால் எழுந்த

கருணையினால் வந்து காட்டின் ஐயோநான் எவ்விழியால் கண்டு மனம்

குளிர்வேன்அங் கயற்கண் அம்மே"

என அவர் பாடியபோது அவருக்கு கண்பார்வை மீள வந்தது. நம்பமுடியாமல் மிகுந்த ஆச்சரியத்துடன் அன்னையினை கண்டவர் மீதி 40 பாடல்களை மிக மிக உற்சாகமாக பாடி முடித்தார்.

தன் துன்பகடலை இன்பகடலாக அன்னை மாற்றியதற்காக இப்பாடல் "ஆனந்த சாஹரம்" என வடமொழியிலும் "இன்பகடல்" என தமிழிலும் பதிந்து கொண்டது.

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, கம்பனின் சரஸ்வதி அந்தாதி, நம்ச்சிவாய கவிராயரின் உலகம்மை அந்தாதி போல, நீலகண்ட தீட்சிதர் தனக்கு வந்த பெரும் சோதனையில் இருந்து மீளும்போது பாடிய இந்த "ஆனந்த சாஹரம்" பெரும் பிரசித்தியானது,

மன்னன் மிகுந்த வேதனையுடன் அவரிடம் கேட்டான், என் தண்டனை உமக்கு எப்படி முன்பே தெரிந்தது?

அவர் சொன்னார் "ராணியின் இடது தொடையில் மச்சம் உண்டு என்பது ஞானதிருஷ்டியில் அம்மன் அருளில் தெரிந்தது போலவே தெரிந்தது"

நாடாளும் மன்னன் அவர் பாதம் விழுந்து அம்மன் சன்னதியில் மன்னிப்பு கோரினான், செய்தி அறிந்துவந்த ராணியும் அவர் பாதம் பணிந்து கதறினாள், அவர் சபித்துவிடுவாரோ எனும் அச்சம் இருவருக்கும் இருந்தது.

அவர் அவர்களை அன்னையின் பெயரால் வாழ்த்தி எழுந்திருக்க செய்து அவர்கள் குலம் சொக்கன் பெயரால் வாழும் என வாழ்த்தினார்.

இச்சம்பவத்துக்கு பின் மதுரை ஆலயத்தில் கண்பரிகார வழிபாடும் பூஜையும் பிரசித்தியானது, இன்றும் கண் சம்பந்தமான பல நோய்களை தீர்க்கும் தலமாக அத்தலம் இருப்பதும் இதில் இருந்துதான்.

தலமை அமைச்சன் அரண்மனையில் எல்லா உரிமையும் பெற்றவன். அந்தபுரம் வரகூட அனுமதி பெற்றவன் என தீட்சிதரை மானிட சுபாவத்தில் மன்னன் தண்டிக்க நினைத்தது மீனாட்சி அருளில் இப்படி மாறிப்போனது.

அதன்பின் அவர் அங்கு தங்க விரும்பவில்லை. தன் அந்திம காலத்தினை தாமிரபரணி கரையில் வாழ விரும்புவதாக சொன்னார், மன்னன் அங்கே வற்புறுத்தி பார்த்தான் ஆனால் முடியவில்லை

மன்னன் இனி ராயர் கோபுரத்தை கட்டமாட்டேன். தீராபழிக்கு ஆளானேன் என சொல்லி அந்த வேலையினை நிறுத்தினான், இன்னும் அது அப்படியே உண்டு.

தீட்சிதரோ மீனாட்சி அன்னையினை மனமுருக பிரார்தித்து அவள் சன்னதியிலே சிலநாள் தங்கியிருந்தவன் மன்னனிடம் உத்தரவு கேட்டுவிட்டு தெற்கு நோக்கி கிளம்பினார், அவர் தோளில் ஒரு கிளி அமர்ந்திருந்ததது.

"தாயே நான் தவம் செய்யவேண்டும், உலக்கை சத்தம் கேட்காததும் மக்கள் இரைச்சல் மட்டுமல்ல கோழியோ நாயோ பசுவோ கத்தாத இடம் எனக்கு வேண்டும்" என அவர் மனமார கேட்டுகொண்டு நடந்தார்.

அவர் செல்லுமிடமெல்லாம் அமைதியாக இருந்தது கிளி அவர் பல சிவதலங்களை தரிசித்துவிட்டு, நெல்லையப்பரை தரிசித்துவிட்டு மேற்கு நோக்கி நகரும்போது தாமிரபரணி ஓரமாக இருக்கும் பாலாமடை எனும் கிராமத்திற்கு வரும்போது அக்கிளி சடசடவென சிறகுகளை அசைத்து பறந்து அங்கே வட்டமடித்து பின் மறைந்தே போனது.

இதுவே தனக்கான இடம் என்பதை உணர்ந்தவர் மன்னனுக்கு ஓலை அனுப்பினார், மன்னன் அவ்விடம் அவருக்கு என சாசனமே எழுது தந்தான் அது இன்றும் உண்டு.

நீலகண்ட தீட்சிதருக்கு வயதுமாயிற்று அவர் வாழ்வில் காசியினை காணமுடியா பெரும் ஏக்கம் இருந்தது, மன்னனிடம் அனுமதி உதவி பெற்று கோவில் பணி முடிந்த பின்பு காசிக்கு செல்ல பெரும் விருப்பம் கொண்டிருந்தார் ஆனால் அது நடவாமல் போனது.

"என் தாயே காசிக்கு என்னை அனுப்பாமல் தவிர்த்தாயே குமரகுருபரன் கொண்ட யோகம் எனக்கில்லலோ" என முறையிட்டார், அவ்வளவுதான் அவர் முன்னால் இருந்த கலசத்தில் இருந்து கங்கை பொங்கி ஓடிற்று.

ஆம், அவர் நம்பமுடியா அதிசயத்தை கண்டார் கலயத்தில் இருந்த நீர் கங்கை நீராக வழிந்தோட  காசியில் அவர் நின்றார் கங்கை பெரிதாக ஓடிகொண்டிருந்தது அங்கே நீராடி அன்னையினை காசிநாதனை மனமுருக பிரார்த்த்தார் விழுந்து பிரார்த்தித்தார், இது போதும் தாயே போதும் போதும் என அவர் சொனபின்பே பாலமாடையில் இருப்பதை உணர்ந்தார்.

அவர் கங்கையினை அங்கே கொண்டுவந்ததால் அந்த இடம் "நீலகண்ட சமுத்திரம்" என்றாயிற்று, அங்கே காசிநாதன் மங்களாம்பிகை கோவிலை கட்டி மீனாட்சி சன்னதி கட்டி வழிபட்டவர் அங்கே மார்கழி சதயம் அன்று சித்தி அடைந்தார் அவரின் சமாதி அங்குதான் உண்டு.

இன்றும் அங்கு கோழிகள் கூவுவதில்லை நாய்கள் கத்துவதில்லை பறவைகள் சத்தமுமில்லை, ஓரிரு வீடுகளை தவிர பெரிதாக ஊர் பெருகுவதுமில்லை. மிக மிக பெரிய அமானுஷ்ய சக்தி அங்கே நிலவுகின்றது, அதிர்வுகளை அள்ளி கொடுக்கும் தலம் இது, இன்றும் மீனாட்சி அன்னையின் பெயர் சொல்லி அங்கு வேண்டினால் கிடைகாத வரம் என எதுவுமில்லை அங்கு இப்போதும் அருள் தருகின்றார் தீட்சிதர்.

அந்த மாபெரும் சித்த்யோகிக்கு மார்கழி சதயம் குருபூஜை நாள்.

மதுரை ஆலயத்தின் மிகபெரிய சாட்சி இவர், சுல்தான்களால் சீரழிந்து இடிதும் தவிடுபொடியாக கிடந்த மதுரை ஆலயத்தை திருமலைநாயக்கனுடன் சேர்ந்து மீளகட்டி இன்று நாம் காணும் ஆலயமாய் முழு பூஜைகள் விழாக்கள் கொண்ட ஆலயமாய் மாற்றி தந்தவர் உருவாகி தந்தவர் அவர்தான்.

திருவரங்கத்துக்கு ரமானுஜர் போல இங்கு எல்லா விதிகளும் உருவாக்கி தந்து வழிபாடுகளை மீள ஏற்படுத்தி தந்தவர் அவர்தான், அவர் இல்லையேல் இன்றுள்ள ஆலயம் இல்லை.

திருமலை நாயக்கன் வரம் பெற்றவன் திருப்பணிகள் பல செய்ய பிறந்தவன் அவனுக்கு அன்னை மீனாட்சி வழிகாட்ட அனுப்பிய சித்தன் இந்த நீலகண்ட தீட்சிதர்.

சுல்தான்கள் பாழாக்கிய தன் ஆலயத்தை தன் பக்தர்களை கொண்டே மீட்டெடுத்த மீனாட்சி அவர்களை கொண்டே காசிவரை மீட்டெடுத்த மீனாட்சி இன்றும் தன் பக்தனின் நினைவினை அந்த ஆலயத்தில் தாங்கி நிற்கின்றாள்.

அவள் சன்னதி அருகே உள்ள மண்டபமும் இன்னும் பல மண்டபங்களும் நிற்கும் பெரிய தூண்களும், புது மண்டபமும் அவர் பெயரை எக்காலமும் தாங்கி நிற்கும்.

இன்றும் வேலை முடியா ராயர் கோபுரமும், பட்டத்து ராணி இடது தொடையில் தழும்பு கொண்ட சிலையும் மதுரை ஆலயத்தில் நடந்த வரலாற்றை அறுதியிட்டு சொலகின்றன‌.

நீங்கள் எந்த பெரிய இக்கட்டில் துன்பத்தில் இருந்தாலும் மதுரை ஆலயத்தில் நீலகண்ட தீட்சிதரின் "இன்பகடல்" எனு பாடலை பாடி வணங்கினால் நிச்சயம் பெரும் அதிசயம் உங்களிலும் நடக்கும், அவர் பெயரை சொல்லி கேட்பதை அன்னை தடுப்பதில்லை.

அப்படியே நெல்லை பக்கம் செல்லும்போது பாலமடை பக்கம் இருக்கும் அவரின் சமாதிக்கு செல்லுங்கள். அங்கு அவரை வீழ்ந்து வணங்கி உங்கள் குறைகளை எல்லாம் சொல்லுங்கள் உங்கள் அகக்கண் திறக்கும் வாழ்வில் எல்லா வழியும் திறக்கும்.

மார்கழி சதயம் அவருக்கான குருபூஜை நாள், அவரை நினைந்து வழிபடுவோர்க்கு உடல்குறை மனகுறை என எதுவும் வாரா, எல்லாமும் நலமாகும்.

அவர் பெயரை சொல்லி வணங்கும் குழந்தைகள் பெரும் கல்வி பெறுவார்கள் ஞானமடைவார்கள், பெரும் ஞான அறிவு குழந்தைகளாய் வளர்வார்கள்.

மதுரையில் இருப்போர் மறவாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். அவருக்காய் விளக்கேற்றி மன்றாடுங்கள் அந்த ஞானபெருமகன் இல்லையென்றால் இப்போதிருக்கும் ஆலயமுமில்லை வழிபாடுமில்லை. அந்த நன்றிக்கவது மதுரையில் அவரை வணங்குங்கள்.

நெல்லை பக்கமிருப்போர் பாலாமடை சென்று அவரை வணங்கி பணியுங்கள் ஒரு மலர் இட்டு அந்த மகானை வணங்கினாலும் அன்னை மீனாட்சி கோடிபலன் உங்களுக்கு தருவாள்.

மதுரை என்பது சிவபூமி இறைவன் தேர்ந்தெடுத்து கொண்ட இடம், அங்கு அவன் தான் யார் என நிருபிக்க பல சோதனைகளை அனுமதிப்பார், உரிய நேரம் வரும்போது அன்னையும் அய்யனும் தங்கள் சக்தியினை காட்டி தங்கள் ஆலயத்தை புனித தலத்தை மீட்டெடுப்பார்கள்.

அப்படி இந்த திருபரங்குன்றம் சோதனையும் அன்னையின் புன்னகையில் விரைவில் தீரும், அன்று திருமலைநாயக்கனையும், நீலகண்ட தீட்சிதனையும் அழைத்த அன்னை நிச்சயம் தன் அடியார்களை அழைத்து வந்து தனக்குரியவற்றை மீட்டெடுத்து கொள்வாள்.

மார்கழி சதயமன்று நீலகண்ட தீட்சிதரை அன்னை மீனாட்சி நினைவுடன் வணங்கும் எல்லோருக்கும் அவளின் பெரும் கருணையும் காவலும் நீக்கமற நிறைந்து நிற்கட்டும், எல்லோரும் எல்லாமும் பெற்று வாழட்டும் ஞானமும், செல்வமும் எல்லோருக்கும் நிரம்ப பெருகட்டும்.

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...