Wednesday, December 24, 2025

கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததி - Kettavarampalayam Bajani Panthathi

அணிந்துரை
-----------------------

ஸ்ரீய:பதியான பகவானின் கிருபையை பகவன் நாமத்தினால் தான் பெறமுடியும் என்று நிரூபணம் செய்த ஸ்ரீ பகவன் நாம போதேந்தர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஸ்மரணத்துடன். இதுநாள் வரை நாம ப்ரசாரத்தில் லேகனம் வழியாக, 77 யாத்திரைகள் மூலம், 1,076 பிரதிஷ்டைகளைக் கொண்டு ப்ரமாணிகமாக ஈட்டியுள்ள சுமார் 11,200 கோடி பகவன் நாம சங்கீர்த்தனத்துடன், நாம் சங்கீர்த்தன, நாம் ஸமரண பரமான பல்லாயிரம் கோடி நாமங்களின் கருணையை யாசித்து இந்த அணிந்துரையை ஸ்ரீ ராம நாம வங்கி வழங்குகிறது.

நாம சங்கீர்த்தனம் வேறு ஸங்கீதம்வேறு. ஸங்கீதம் ராக, தாள பரமானது. சங்கீர்த்தனம் என்பது உரத்துச் சொல்லுதலே ஆகும். இது தாள, ராக, பரமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

பஜனை

பஜ் என்ற ஸம்ஸ்க்ருத தாதுவிலிருந்து பஜ, பஜி, பஜே, பஜரே, பஜேஹம், பஜனை போன்ற வார்த்தைகள் வந்தன. பஜி என்ற வார்த்தை பகவத் கீதையில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜபி, ஜெப, இவைகளிலிருந்து வேறுபட்டதே பஜி, பஜ. முன்னதிற்கு தியானமும், மௌனமும் அங்கம். பின்னதிற்கு உரத்துச் செய்வதே ப்ரதானமாகும்.

நான்கு வகையான கீர்த்தனம்

பகவானைப் பற்றிய கதைகளை வாசித்தல், உபன்யஸித்தல் பாராயணம் செய்தல் இவைகள் கதானு கீர்த்தனமாகும். பகவானைப் பற்றிய குறிப்பிட்ட லீலைகளை விவரித்தால் அதை லீலானு கீர்த்தனம் என்பர். பகவானைப் பற்றிய குணங்களைப் பாடினால் அது குணானு கீர்த்தனம் எனப்படுகிறது. அவனுடைய நாமங்களை பஜித்தால் அது நாமானு கீர்த்தனம் எனப்படுகிறது. முதல் மூன்று கீர்த்தனங்களுக்கும் அவனுடைய நாமம் அவசியமாகிறது. நாம கீர்த்தனத்திற்கு மற்ற மூன்றும் தெரிந்திருந்தாலும், இல்லை என்றாலும் பாதகமில்லை. அவனைப் பற்றிய சரித்திரம், கதை, லீலை, குணம் இவற்றை ஸ்மரிக்கின்றவர்களுக்கும் அவனுடைய நாமஸ்மரணம் ஏற்படுகிறது. ஒன்றுமே தெரியாத பாமரனும் நாமஸ்மரணம் பெறமுடியும். இருவருமே நல்ல கதியை அடைவார்கள் என்பதே சித்தாந்தம்.

சமூகத்தில் மிகக் கீழானவர்களுக்காகவே நாமம் என்பதுபோல் நமக்குள் பேதம் யதார்த்தமாக இருந்தாலும் இந்த நாம விஷயம் தவிர வேறு எதனாலும் அவனை அடைந்து விடுவது இந்த யுகத்தில் சாத்தியமில்லை என்பதுடன் யாருக்கும் நாம சங்கீர்த்தனம். நாமஸ்ரவணம். நாமஸ்மரணம் இவைகளில் விலக்கு சாஸ்திரத்தினாலும், பெரியோர்களாலும் அளிக்கப்படவில்லை. ஜபத்தினால், தியானத்தினால் எந்த நிலை அடையப்படுமோ அது நாம் சங்கீர்த்தனத்தினால், பஜனையால் கிடைத்துவிடும்.

ஸத்குரு பஜனை பத்ததி

ஸ்ரீபகவான் நாம போதேந்திரரும், ஸ்ரீ ஐயாவாளும் செய்த நாம சித்தாந்தத்தின் பலனாக தென் ப்ரதேசங்களில் பரவலாக இருந்த ஏகநாம கீர்த்தனம் ஷீண தசையை அடைந்தபோது ஸ்ரீமருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் அவதாரம் நிகழ்ந்தது. ஏக நாமத்தில் ருசியை ஏற்படுத்த பஜனையைக் கையாண்டார். இவர் பிரசாரத்தின் போது பலவார்களுக்கு சென்றார். குறிப்பாக தாளபாக்கத்திற்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. தாளபாக்கம் வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து பாலாஜியை தரிசிக்க வருபவர்களுக்கு அந்த நாளில் ஒரு ப்ரதானமான ஸ்தலமாக இருந்தது. இந்த இடத்தில் ஸ்ரீ மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் பல பரதேசத்திலிருந்து வந்த பாகவதர்களை சந்திக்கவும் பல்வேறு மொழிகளில் பசுவானைப் பற்றிய பாடல்களை அறிந்து கொள்ளவும் ஸந்தர்ப்பம் ஏற்பட்டது. இவைகளைக் கொண்டு ஒரு பஜனைப் பத்ததியை ஸ்ரீ ஸ்வாமிகள் ஏற்படுத்தினார். இதுவரை தென் தேசத்தில் அறிமுகமில்லாத ஜெயதேவரின் கீத கோவிந்தத்தை அந்த பத்ததியின் ஜீவனாக வைத்தார். ராதா கல்யாண உற்சவத்தை இங்கு விமரிசையாக ப்ரசாரம் செய்தார். வெளியில் வைராக்ய சீலராக தரிபுண்ட்ர ஸகிதமாகவும், வாக்கில் இடைவிடாத ராம நாமத்துடனும் ஹ்ருதயத்தில் ராதையுடன் கூடிய ஸ்ரீக்ருஷ்ணனை உருகி, உருகி ஆராதிப்பவராகவும் இவர் இருந்தார். இந்த பத்ததியே சுமார் 200 வருடங்களாக தமிழ்நாட்டில் நிலவி வருவதுடன், அது பல்வேறு காலத்தில், பல்வேறு மஹனீயர்களால், பல கிளைகளாக வ்ருத்தி அடைந்து இன்று ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது.

ப்ரதேச பத்ததிகள்

மேற்குறிப்பிட்ட காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பிலிருந்தே நமது பாரத தேசத்தில் பஜனை பத்ததி வேரூன்றி இருந்தது தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் கேரள தேசத்தில் பட்டத்திரியும், பூந்தானமும், கர்நாடகத்தில் புரந்தரதாஸர், விஜயதாஸர், கனகதாஸர் போன்ற அஷ்ட தாஸர்களும், மகாராஷ்ட்ரத்தில், ஞானேஸ்வர், ஏகநாதர், நாமதேவர், துக்காராம் மற்றும் கணக்கு வழக்கற்ற பக்தர்களும் குஜராத்தில் நரசிம்ம மேதா போன்றோரும், வடதேசத்தில் ஹரிதாசர், சூர்தாஸர், கபீர், லீலாசுகர், மீரா போன்றோரும். கிழக்கு வங்காளத்தில் ஸ்ரீஸைதன்யரும் அவர்களின் சிஷ்யர்களான ஆறு கோஸ்வாமிகளும், பரமஹம்ஸர், விவேகானந்தர் போன்றோரும். ஒரிசாவில் ஜெயதேவ ஸ்வாமிகளும், ஆந்திரத்தில் பத்ராசல ராமதாஸர், க்ஷேத்ரகஞர், அன்னமாச்சாரியார் ஆகியோர்களும் அவதார புருஷர்களாகவும், ஸம்ப்ரதாயப் ப்ரவர்த்தர்களாகவும் இருந்ததால் பாகவத ஸம்ப்ரதாயத்தையும், நாம கீர்த்தனத்தையே ப்ரதானமாக அவலம்பித்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தங்கள் ப்ரதேச பாஷைகளிலேயே பெரும்பாலும் பாடி பகவத் ஸ்மரணையை தங்கள் மக்களுக்கு ஊட்டி வளர்த்தனர், எனவே ப்ரதேச பாஷையில் பஜனை பத்ததி என்பது ஒரு புதிய விஷயமில்லை. மஹனீயர்களால் ஸ்தாபிக்கப்பட்ட வழியே ஆகும்.

தமிழ்நாட்டு பத்ததிகள்

ஸத்குரு ஸ்வாமிகள் பத்ததியில் பெரும்பாலும் ஸம்ஸ்க்ருதமும், தெலுங்கும் இருந்தன. இவர் காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய ஸ்ரீத்யாகராஜ ஸ்வாமிகள் தனக்கென்ற ஓர் பூஜா பத்ததியை அமைத்துக் கொண்டார். அதே காலகட்டத்தில் இருந்த கோபாலக்ருஷ்ண பாரதியாரும் ஏராளமான கீர்த்தனைகளை பரமேஸ்வரன் பேரில் இயற்றியுள்ளார். ஸ்ரீநரசிம்ம பாகவதரின் பத்ததியில் அப்பொழுதைய கால கட்டம்வரை பல சேர்க்கப்பட்டிருந்தது. ப்ராச்சீனம் வழுவாமலே இந்த மாற்றங்கள் இருந்தது. ஸ்ரீகோபால கிருஷ்ண பாகவதர் புதுக்கோட்டை அப்பா ப்ராச்சீன பத்ததியில் பல மாற்றங்கள் கொண்டுவந்தார். போதேந்தராள், ஐயாவாள், ஸத்குரு என்றிருந்த குருகீர்த்தன வரிசையில் தக்ஷிணாமூர்த்தி, ஆதிசங்கரர் என்று முன்னிலைப் படுத்தினார். இவைகள் எல்லாம் பகவத் ஆக்ஞைபெற்ற சிறந்த மஹனீயர்களால் அவ்வப்போது ஏற்பட்ட சரிவை உயர்த்துவதற்காகவும், அடையாளத்திற்காகவும், இன்னும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்திற்காகவும் ஏற்பட்ட மாறுதல்களுடன் தற்போது பலரால் செய்யப்பட்டு வரும் சேர்ப்புகள், மாறுதல்கள். நீக்கல்கள் இவைகளை ஒப்பிட முடியாது.
 
ப்ராச்சீன பத்ததியில் பெரும் மாறுதல்கள் செய்யப்பட்டதற்கு நேரமின்மை காரணமாக கூறுவதை ஒப்புக்கொள்ள இயலாது. ப்ராச்சீன பத்ததியிலேயே எந்த வழிமுறையையும் மீறாமலே நேரத்திற்குத் தக்கபடி பாடக்கூடிய வசதி உள்ளது என்பதே உண்மை. இப்பொழுது செய்யப்பட்டு வரும் ராக, தாள, மாறுதல்கள் உட்பட யாவும் தன்னை வேறுபடுத்தி காண்பிப்பதற்காகவும், முன்னிலைப்படுத்திக கொள்வதற்காகவும் தான் என்று தோன்றுகிறது. பஜனையின் கீர்த்தனைகள் பொதுவாக ஒரு ஸ்லோகம் அல்லது தகுந்த விருத்தம் இவைகளுடன் ஆரம்பித்து பிற்பகுதியில் நாமாவளியுடன் முடிவடையும்.
ஒரு கால கட்டத்தில் ஸ்லோகத்தை குறிப்பிட்ட ராகத்தில் சொல்லும்போதே அந்த பாட்டு இன்னது என்று கண்டுபிடிக்க முடியும். கீர்த்தனைகளின் எல்லா அடியும் பஜனைக்கு வந்திருப்போர்.

அனைவரும் வாங்கிப் பாடும்படி அமைக்கப்படும். நாமாவளிகளில் நிச்சயமாக நாம கோஷம் விண்ணைப் பிளக்கும். பஜனையின் சாரமே கோஷ்டி கானம்தான் என்றும், ஒவ்வொரு பஜனையிலும் எத்தனைப் பேரைப் பாட வைத்தார்கள் என்பதே சிறப்பான அம்சமாக இருந்தது பஜனை பசுவானுக்காகவே என்ற நிலமை இருந்தது. யாராலும் பாட முடியாத தாளக்கட்டு, தெரிந்த பாட்டையும் கூட ராகத்தை மாற்றிப்பாடுவது. உசத்திப் பாடுவது, பக்தர்களைப் ப்ரமிக்க வைப்பது. சரணங்களை விட்டுவிடுவது. சரணங்களை மாற்றிப்பாடுவது. மஹனீயர்களின் சாகித்தியங்களில் தன் புத்தியைக் கொண்டு மாற்றுதல் சேர்த்துக் கொள்ளுதல், இவைகளுடன் கச்சேரி போல் பஜனையை ஆக்கிவிடுதல், வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் ஸரவண பாக்கியத்தை மட்டும் அளித்தல், ஜனரஞ்சகமாகப் பாடுதல், பொருள் அறியாததனால் தவறாக பத பிரிப்புகளுடன் பாடுதல், ப்ராசீன பாடல்களைத் தவிர்த்துவிடுதல் அல்லது வெகுவேகமாகப் பாடி தன் சொந்த சாகித்தியங்களை விஸ்தாரமாகப் பாடுதல், என்ற பெருவாரியான இன்றைய நிலையிலும், மஹனீயர்கள், சாதுக்கள், பாகவதோத்தமர்கள் சிறந்த பாசுவத தாமங்களைக் கடைபிடிப்பவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் நாம் சித்தாந்தம் அறிந்தவர்களானதால் எப்படிப் பாடினாலும் பாடப்படும் பகவந்நாமம் யாரையும் ஒரு நாளும் கைவிடாதென்றே நடமாடி வருகிறார்கள். அறிந்தே செய்யும் நாம அபச்சாரம், பாகவத அபச்சாரமாயினும் நாம ஆவ்ருத்தியினால் அத்தகைய அபச்சாரங்கள் நீங்கி அனைவரும் நற்கதியே அடைவார்கள் என்பது பகவந் நாமத்தின் பெருமை, அதற்காக பகவன் நாமத்தை யாரும் பரிசோதித்துப் பார்க்க துணிய மாட்டார்கள் என்பதே நம் நம்பிக்கையும் ப்ரார்த்தனையும்.
--------------
கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததி
--------------
மேற்கண்ட பின்னணியில் நம்முடைய கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததியைப் பார்க்கும்போது நமக்கு ப்ரமிப்பும், சந்தோஷமும், பரவசமும் ஏற்படுகிறது. மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளின் ஜீவிய காலத்திற்கு ஒரு நூறு வருடத்திற்குப் பின் ஏற்பட்டது இந்த பத்ததி. இவ்வூரைச் சேர்ந்தவர்கள் வைதீகர்களாகவும், பாகவதர்களாகவும் இருந்து அப்போது நிலவி வந்த பத்ததியை நன்கு அறிந்தவர்களாகவும், அனுஷ்டித்தவர்களாகவும் இருந்தனர். அதன் தாக்கத்தினாலேயே ஸத்குரு ஸ்வாமிகள் போலவே இவர்களும் யாத்திரை செய்து பல்வேறு பாடல்களை திரட்டிக்கொண்டு வந்தனர். அதே பாஷையில் சில பாடல்களை சேர்த்துக் கொண்டாலும், ஸம்ஸ்கிருதம் ஷீணித்து வருவதை அக்காலத்திலேயே உணர்ந்த தீர்க்க தரிசிகளாக இருந்து தங்கள் மனம் பகவானிடம் ஒன்றிய பாடல்களை ப்ரதேஸ பாஷையில் எழுதினர். முக்கியமாக சில அபங்கங்கள் பத்ராசல ராமதாஸர் கீர்த்தனைகள் புரந்தரதாஸரின் தேவர் நாமாக்கள் ஆகியவற்றின் கருத்துக்களை பரவலாக தங்கள் பாடல்களிலும், நாமாவளிகளிலும் பயன்படுத்தினர். இதனுடன் பொருத்தமாக திவ்ய ப்ரபந்த பாசுரங்கள், தேவாரம், சித்தர் பாடல்கள், வள்ளலார், அருணாசலக் கவிராயர் ஆகியோரின் பாடல்களையும் சேர்த்துக் கொண்டனர்.

ஸ்ரீ ராமநவமி தொடங்கி நடக்கும் பஜனை உற்சவமான ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவ பத்ததியாக தங்கள் வார்ஷீக உத்ஸவத்திற்காக அமைத்துக் கொண்டதின் வடிவமே இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது சம்பரதாய பஜனையில் எவ்வளவு பிடிப்பும், தேர்ச்சியும், ஆகர்ஷணமும் உள்ளவர்களாக இவர்கள் இருந்துள்ளார்கள் என்று தெரிகிறது. சம்ப்ரதாயம் மீறாமலே தங்கள் இஷ்ட மூர்த்திகளையும் கீர்த்தனைகளையும் பாட இவர்கள் த்யான கட்டங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம், உலூகல உத்ஸவமாகவும், வைதீக முறைப்படியும் நடத்தப்படுவதில். தர்ப்பையில் திவ்ய தம்பதிகளைப் ப்ராணப் ப்ரதிஷ்டை செய்வது மனதை கொள்ளை கொள்ளும்படி அமைந்திருக்கிறது. இந்த வழக்கம் எங்கும் அனுஷ்டிக்க கூடியது என்பதும் வெகுவாக பரவி பல இடங்களில் நடக்கும் என்பதே நம்முடைய ஆசையும், ப்ரார்த்தனையும், புதியதாக சீதா கல்யாணம் செய்வர்கள் இந்த வழியை கடைபிடிப்பதை நாம் பரிந்துரைக்கிறோம். மற்றவர்களுக்கு ஏற்கனவே உள்ள வழியிலிருந்து மாற இயலாமல் இருக்கும் என்பதினாலேயே சொல்கிறோம். அதேபோல பாகவத ஆராதனையும் குறிப்பிடப்பட வேண்டியது. இந்த சந்தர்பத்தில் இவ்வூர் வாஸிகள் பகவானையும் பாகவதாளையும் வேறு வேறாக கருதாத பாவம் முழு வீச்சில் தெரிகிறது. இந்த கட்டங்களில் பாடப்படும் பாடல்கள் அனேகமாக தமிழ் பாடல்களாகவும், தத்துவ பாடல்களாகவும், நிலையாமையை வலியுறுத்தும் பாடல்களாகவும், இருப்பதால் பொருள் அறிந்து, மனம் உருகி ஒன்ற முடிகிறது. இது பாடுபவர்களிடமிருந்து கேட்பவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. பல கட்டங்களில் இது நடத்தப் படுவதால் ஒரு இடத்தில் ஆராதிக்கப்பட்டவர் வேறு இடத்தில் ஆராதிப்பவராக ஆவதினால் உயர்ந்த ஸமத்வம் ஆராதனம் அச்யுதஸ்ய என்ற மொழியின் வாசல் திறக்கப்படுகிறது. இதன் மூலமாக எங்கும், எதிலும், எப்போதும் யாரும் பகவானைப் பார்க்கும் அத்வைத நிலைக்குப் போக அச்சாரம் வழங்கப்பட்டதாகிறது. இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி எந்த பூஜையிலும் எந்த ஆராதனையிலும் ஆவாஹனம் அப்புறம் பூர்த்தி என்றிருப்பதுபோல் அல்லாமல் பாகவத ஆராதனை நடப்பது ஸகஜமாகவும், ஸௌலப்யமாகவும், இருக்கிறது. இதுவே இதன் விசேஷம் எனலாம்.

இந்த உற்சவ பத்ததிக்கு ஸம்ப்ரதாயம் ஆதாரமாகவும், மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் ப்ராணனாகவும் இருக்கிறது. அந்த நாட்களில் இவர்களே வைதீகர்களாகவும், பாகவதர்களாகவும் இருந்ததினால் இது மிகச் சுலபமாக நடத்தப்பட்டுள்ளது.

காலம் செல்ல செல்ல இந்த உற்சவ பத்ததியை அனுஷ்டிக்க வெளியிலிருந்து வைதீகர்களும், ஸம்ப்ரதாய பஜனைக்காக ஸமீப காலங்களில் பாகவத கோஷ்டிகளும் வரவழைக்கப்பட்டு நன்கு கௌரவிக்கப்பட்டனர். ஸம்ரதாய பஜனை தவிர, இந்த ஊருக்கென்று இயற்றப்பட்ட ப்ராசீன பாடல்கள் இவ்வூர் பக்தர்களாலேயே போஷிக்கப்பட்டது. இவ்வூர் பக்தர்கள் எல்லோரும் குடி பெயர்ந்தவர்களாகவும், ஜீவனோபாயத்திற்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர்களாக ஆனபோதிலும் ஊர் உற்சவத்தை தங்கள் நிதி ஆதாரத்தை விரிவுபடுத்திக் கொண்டதின் மூலமாக தங்கள் ஸ்ரீராம கைங்கர்யத்தை விடாது செய்துவந்தனர், வருகின்றனர். முழு நேரத்தையும் இதற்கென்று ஒதுக்கும் பக்தர்கள் இல்லாததினாலும் ஏற்கனவே இருந்த பெரியோர்களின் வயது முதிர்ச்சியினாலும் ஸம்ப்ரதாயப் பாடல்களில் இவர்களுக்கு பரிச்யம் குறைந்ததாலும், தங்கள் பாடல்களை அதன் ப்ராசீன வடிவத்தில் காப்பாற்ற வேண்டியதிருந்ததாலும் இவர்கள் பஜனைகளில் தங்கள் தமிழ்ப் பாடல்களையே அதிகம் முழங்கினார்கள். ஸம்ப்ரதாய பஜனைக்காரர்கள் இந்த ஊரில் பஜனை செய்யும்போது ஸன்னதியைப் பார்த்து பஜனை செய்தல், நின்று கொண்டே பஜனை செய்தல், தீபம் எடுக்கும்போது போன்று சில கட்டங்களில் ஊர் ஸம்ப்ரதாயத்தை அனுஷ்டிக்க வேண்டி கோரிக்கை வைப்பதன்றி அவர்களின் ஸ்வதந்திரத்தில் தலையிடுவதில்லை.

இப்பொழுது கொஞ்சம் காலமாக ப்ரகாசிக்கும் ஆர்வமும் நம்முடைய ஸம்ப்ரதாயமான தமிழ் பாடல்களையும், உற்சவ பத்ததியையும், காப்பாற்றி வரும் தலைமுறையினருக்கு இன்று உள்ள நிலமையில் எவ்வளவு தூரம் காப்பாற்றிக் கொடுக்க முடியுமோ வழியில் ஏற்பட்டதுதான் இந்த தொகுப்பு.

எல்லா இடத்திலும் ஏற்பட்டிருக்கும் விஷயங்கள் இங்கும் உண்டு அல்லவா? எனவே இதுதான் இந்த ஊரில் அனுஷ்டித்து வந்த முழுப்பத்ததி என்று கூறிவிட முடியாது. இன்னும் எவ்வளவோ பாடல்கள் இருந்திருக்கலாம். எவ்வளவோ பாடல்கள் பாடப்படாமல் இன்று புழக்கத்தில் இல்லாமல் ஆகியிருக்கலாம். தமிழ்ப் பாடல்களில் இருக்கும் ஆர்வம் காரணமாக புதிய பாடல்கள் சேர்ந்திருக்கலாம். சில பாடல்களில் வார்த்தைச் சிதைவு இருக்கலாம். அனேகமாக இவைகள் கேட்டு எழுதிய பாடல்களே. எழுத்து வடிவில் சிலவையே இருந்தன.

இப்புத்தகத்தின் நோக்கம்...

1) இனி வரும் தலைமுறைக்கு இன்றைய நிலையில் இதுவரை நமக்கு தெரிந்த வரையில் அனுஷ்டித்து வந்த உற்சவ பத்ததிகளைப் பதிவு செய்தல்.

2) நம்முடைய ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ்ப் பாடல்கள் தவிர ஸம்ப்ரதாய பஜனையில் சுலபமாக அனுஷ்டிக்கக் கூடிய பாடல்களில் பரிச்யம் ஏற்படுத்துதல்.


3) வெளியூரிலிருந்து வரும் பாகவத கோஷ்டிகளுக்கு தமிழ் பாடல்கள் தவிர எந்த முறையில் ஸம்ப்ரதாயம் இங்கே அனுஷ்டிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துதல்.


4) மிக முக்கியமானதாக நாம் கருதுவது, எல்லா பாஷைகளின் பாடல்களுமே பொருளறியாமலே பாடிக்கொண்டிருக்கும் காலச் சூழ்நிலையில் துடிப்பும், ஸத்யமும் நிறைந்ததும் மஹனீயர்களால் பாடப்பட்டதான இந்த தமிழ்ப் பாடல்களை மற்ற பஜனை ஸம்ப்ரதாயங்களில் த்யான கட்டங்களில் பாட இந்தத் தொகுப்பு உதவும்.


5) ஸீதா கல்யாண வைபவம் இத்தொகுப்பில் உள்ளதுபோல யாரும் அனுஷ்டிக்க ஆவலைத் தூண்டும். இத்தொகுப்பைப் பயன்படுத்தி அனைவரும் பாம ஸ்ரேயஸ்களை அடைய குருநாதன் ஸ்மரணையுடன் பகவந் நாமத்திடம் ப்ரார்த்தனை.

ஸ்ரீ ராம நாமா வங்கி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...