Wednesday, December 24, 2025

கேட்டவரம்பாளையம் ஸ்ரீராம பஜனை மந்திரம் தோற்றம் - ஸம்பிரதாயங்கள்

கேட்டவரம்பாளையம் ஸ்ரீராம பஜனை மந்திரம் தோற்றம் - ஸம்பிரதாயங்கள்

--------------

பெயரின் விளக்கம் - ஓர் அறிமுகம்

'ஸ்மரணாத் அருணாசலா' அருணையை நினைக்கின் முக்தி என்கிற கோட்பாட்டிற்கேற்ப திருவண்ணாமலைக்கு அருகாமையில் உள்ள கலசபாக்கம் தாலூக்கா கடலாடி பிர்காவில் ஆதியில் கஷ்டஹரம் பாளையம் (கஷ்டத்தை தீர்க்கும் பாளையம்) காட்டு அரன் பாளையம் (காடுகள் அரண்மனைபோல் சூழ்ந்த பகுதி) கட்ரயம் பாளையம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த அருமை. பசுமை, எளிமை, வாய்ந்த இக்கிராமம் தற்போது கேட்டவரம்பாளையம் எனக் கேட்போருக்கு கேட்ட வரத்தை தந்து கொண்டிருக்கின்றது.

கிராமத்தின் அமைப்பு

கிழக்குப் பக்கத்திலிருந்து வழிக்கரைப் பிள்ளையாரைத் தர்ஸித்து கிராம ப்ரவேசம் செய்வதுபோல் அமைந்திருப்பதும் கிழக்கில் சிவன் கோயிலும், மேற்கில் பெருமாள் கோயிலும், கிழக்கு மேற்காக அக்ரஹாரமும் அமையப் பெற்றிருப்பதும் இக் கிராமத்தின் விசேஷமாகும். இதை இவ்வூருக்கு விஜயம் செய்திருந்த காஞ்சி பெரியவர்கள் அனுக்ரஹ பாஷணத்தில் விசேஷமாக குறிப்பிட்டார். கிழக்கில் போளூர் மலையும், தெற்கில் தக்ஷிண ஸ்ரீஸைலம் எனப்படும் பருவத மலையும், வடக்கிலிருந்து புறப்பட்டு மேற்காக நறுமணங்களைப் பரப்பிக்கொண்டு செல்லும் ஜவ்வாது மலையும் இக்கிராமத்திற்கு பெரிய அரண்போல் அமைந்துள்ளது. கிராமத்தின் ஈசானிய பாகத்தில் குன்றின் மீது அலர்மேல் மங்கை ஸமேத பிரசன்ன வெங்கடா ஜலபதியும், அக்ரஹாரத்தின் கிழக்கில் அமைந்த விசாலாட்சி அம்பாள் ஸமேத காஸிவிஸ்வநாதர் ஆலயமும், தக்ஷிண பாகத்தில் த்ரிபுரஸுந்தரி ஸமேத ஸிம்மேஸ்வரர் ஆலயமும், மேற்கு பாகத்தில் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் ஸன்னதியும். அதற்கும் மேற்கில் மாரியம்மன் கோயிலை இணைத்தது இணைத்தபோல் இரு புஷ்கரணிகளும், இவற்றை அணைத்தது போல் நதியும். அதன் முடிவில் செட்டி ஏரியும் அமையப்பெற்றதும் இக்கிராமத்தின் பரிமாணம் ஆகும்.

பஜனை மந்திர தோற்றம்

வடஆற்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள சில சிறு கிராமங்களிலிருந்து இந்த கிராமத்திற்கு சில அந்தணர்கள் குடிபெயர்ந்தனர். அந்நாளில் தினமும் மாலைப் பொழுதில் அக்ர ஹாரத்தில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் நாம ஸங்கீர்த்தனம் செய்து வந்தனர். அவ்வாறு செய்துவந்த நாம் ஸங்கீர்த்தனத்தை ஒரு வைபவமாகக் கொண்டாட அந்த பெரியோர்கள் யத்தனித்னர். அது தொடர்பாக ஸ்ரீதாம்ஜா என்ற ஸ்ரீ ஜானகிராம தீக்ஷிதர் அவர்களின் சிரத்தைமிக்க செயலால் வருடாந்தர ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடத்தும் கைங்கர்யம் 1907-ல் ஆரம்பம் ஆனது. ஸ்ரீ ராமபிரான் பால் அதீத பக்திகொண்ட மாது ஸ்ரீ ருக்மணி அம்மாள் தன்னிடம் இருந்த மனையை ஸ்ரீ ராமபஜனை மந்திரம் முழுமையாக அமைய உபயமாக அளித்தார்கள். ஸ்ரீ செங்கல்வராயர் அவர்கள் தஞ்சாவூர் கலை வண்ணம் கொண்ட ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் படம் கொடுத்தார். அம்மூர் ஸ்வாமிகள் என்ற அவலூர் ஸ்ரீனுவாச ஐயங்கார் உடனிருந்து மிகுந்த ஸ்ரத்தையுடன் இந்த கைங்கர்யத்தில் பங்கேற்றார். ஆரம்ப காலத்தில் ஸ்ரீ ராமநவமி உற்ஸவம் வீட்டிற்கு ஒரு நாள் உபயமாக நடைபெற்றது அப்பொழுது மணியம் ஸ்ரீ வெங்கட்ரமணய்யர் ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ ராமநாதய்யர்,ஸ்ரீ ரங்கநாதய்யர், ஸ்ரீ ராமசேஷய்யர், ஸ்ரீ துரைஸ்வாமி ஐயங்கார். ஸ்ரீ ரங்க ஐயங்கார், ஸ்ரீ சீனு ஐயங்கார், ஸ்ரீ துரைஸ்வாமி வாத்தியார் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

கேட்டவரம்பாளையத்தின் பஜனை ஸம்ப்ரதாயம்

அப்பெரியோர்கள் அந்த நாளில் க்ஷேத்ராடனமாக கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, என்று பல ஊர்களுக்குச் சென்று வந்தனர் யாத்திரைக்குத் தேவையான பொருட்களை இரட்டை மாட்டு வண்டி யில் ஏற்றிக்கொண்டு அவர்கள் கால்நடையாக சென்று வந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். அப்படி யாத்திரை மேற்கொண்ட போது எங்கெல்லாம் இரவு தங்கும்படி நேர்ந்ததோ அங்கெல்லாம் நடக்கும் பஜனைகளில் கலந்து கொண்டனர். அது சமயம் அவர்களை எந்தப் பாடல்கள் மனம் நெகிழ்த்தி உருக்கியதோ அப்பாடல்கள் சிலவற்றை அம்மொழியிலேயும் சிலபாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தும் கேட்டவரம்பாளையத்தின் தனித்துவம் வாய்ந்த ஸம்ப்ரதாயத்தைத் தோற்றுவித்தனர். அவ்வாறு செய்ததில் பண்டரி க்ஷேத்திரத்தில் பண்டரிநாதனின் அபங்கங்களும், கர்நாடகாவின் புரந்தரதாஸரின் சில கீர்த்தனைகளும், ஆந்திராவில் பத்ராசல ராமதாஸர் க்ருதிகளும் அடங்கும் இந்த யாத்திரையில் பாண்டுரங்க தரிஸனம் மற்றும் பத்ராசல ராம தரிஸனம் செய்துவர ஆறு மாதம் ஆகியது. இதில் மற்றுமோர் விசேஷம் யாதெனின் இதர பாடல்களுடன் அதிக அளவில் பாசுரங்கள் தமிழ்ப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் அடங்கியது இவ்வூர் பத்ததி.

"இவ்வூர் ஸன்னதியில் நின்று கொண்டுதான் நாம ஸங்கீர்த்தனம் செய்ய வேண்டும். இதற்கான அம்மூர் ஸ்வாமிகளின் விளக்கம். ''ஆஞ்சநேயர் ஸ்வாமி, நாம் படுத்துக்கொண்டு ராமன் புகழ் பாடினால் ஆஞ்சநேயர் உட்கார்ந்து கொண்டும். நாம் உட்கார்ந்து கொண்டு பாடினால், அவர் நின்று கொண்டும் நாம் நின்று கொண்டு பாடினால், அவர் ஆனந்தக் கண்ணீருடன் நர்த்தனம் செய்து கொண்டே கேட்பாராம். நிஜல்யானிகாதா உபநாராயண என்ற அபங்க தாத்பரியம்."

உற்சவ சமயம் தினமும் உஞ்சவிருத்தியும், காலை, மாலை இரு வேளையிலும் ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி அஷ்டோத்ரங்களும். விஷ்ணு ஸகஸ்ரநாமம், லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனைகளும் நடைபெறும் இடைப்பட்ட நேரத்தில் உபந்யாசம். ஸங்கீதக் கச்சேரியும் இரவில் திவ்யநாம பஜனையும் நடைபெறும். உற்சவத்தில் ஒரு நாள் ஸமஷ்டி உபநயனமும், பத்து நாட்களும் இரு வேளையும் ஸமாராதனையும் நடைபெறும். மேலும் ஸீதா கல்யாணத்தை ஹோமத்துடன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வைதீகப் பூர்வமாக மாலையிலும் மறுதினம் பட்டாபிஷேகத்தன்று மாலை பவ்வளிம்பு என்ற வைபவத்தை வஸந்த கேளிக்கையாகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். கடைசி நாள் ஹனுமத் ஜெயந்தி அன்று இறைவன் எந்த உருவத்திலும் இருப்பான் என்ற கருத்திற்கேற்ப பாதவதாள் ஆராதனையாக வீதியிலுள்ள ஒவ்வோர் இல்லத்தின் முன் நடக்கும் ஆராதனைக்கும் தனித்துவம் வாய்ந்த பாடல்களாகவோ, நாமவளிகளாவோ, அமைத்திருப்பது இவ்வூர் பத்ததியில் முக்கியமானதாகும்.

பஜனை மடத்தின் வளர்ச்சிப் பணிகளும் பங்கெடுத்தவர்களும்

பெரியோர்களால் வகுக்கப்பட்ட பத்ததியின் நாம ஸங்கீர்த்தனத்தினால் ஒரு பஜனை மந்திரம் உருவாகி அதில் ஸ்ரீ ராமநவமி, ஸங்கர ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற வைபவங்கள் அந்தந்த காலத்தில் நாம ஸங்கீர்த்தனத்துடன் நன்கு நடந்து வந்தது. அதில் மேச்சேரி சுந்தர சாஸ்திரிகள். ஸாம்பமூர்த்தி தீக்ஷிதர். இருவரும் மற்றவர்களுடன் மிகுந்த ஸாக்கையோடு நடத்தி வந்தனர். சாஸ்திரி, தீக்ஷிதர் இருவரால் ஸங்கர ஜெயந்தி ஏகாதச ருத்ர அபிஷேகத்துடன் ஸமாராதனையுடன் நன்கு நடந்துள்ளது. இதற்கு பரமாச்சார்யாளின் உபந்நியாசம் ஒன்றில் ஆதிசங்கரர் காலத்தில்தான் விநாயகசதுர்த்தி முதல் எல்லாப் பண்டிகைகளும் வந்தன. எனவே, ஆச்சார்ய ஜெயந்தியை விமரிசையாகவும் அவரவர் வீட்டுப் பண்டிகைபோல் கொண்டாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 1958-ல் பெரியோர்களால் பொன்விழா கொண்டாடப்பட்டது. எம்.கே.விஸ்வநாதய்யரும், ராமச்சந்தர தீக்ஷிதரும் மடத்திற்காக நிலம் வழங்கினார்கள். அம்மூர் ஸவாமிகளின் சிஷ்யை லக்ஷ்மி அம்மாள் குரு ஆராதனைக்காக ஒரு சிறு தொகையை நிரந்தர வைப்பு நிதியிலிட்டு, அதன் மூலம் வரும் வட்டியை கொண்டு ஒவ்வொரு வருட நவமியின் போதும், யுகாதி பண்டிகையன்று அம்மூர் ஸ்வாமிகளுக்கு குரு ஆராதனையாக செய்யப்படுகிறது. பிற்பாடு எம்.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பக்தி ஸ்ரத்தையோடு கலந்து கொண்டு பஜனையை நடத்தினார்.

ஏகாதசி அன்று மாலை அருணகிரிமங்கலத்தை சார்ந்த நாயக்கர் வகையறா மூன்று தலைமுறையாக கருப்பஞ்சாறு பாகவதர்களுக்கு வழங்கி வருகின்றனர். பட்டாபிஷேகத்தன்று பானாம்பட்டு ஸ்ரீநிவாச ஐயர் அன்றைய தினம் ஸந்தர்ப்பணையாக செய்து வந்தார்.

1982-ம் ஆண்டு வி.எஸ்.பட்டாபிராமய்யர் அவர்கள் தலைமையில் பவழவிழா சிறப்பான முறையில் காஞ்சி ஆச்சார்ய ஸ்வாமிகள் ஆசிகளோடு நன்கு நடந்தது. மேலும் சேஷாஜல சாஸ்திரிகளின் குமாரர் ராமசந்திரன் அவரின் இடத்தை பஜனை மந்திர ட்ரஸ்டிற்கு அளித்தார். அந்த இடத்தில் ஆஸ்தீக அன்பர்களின் ஒத்துழைப்பால் இன்று நவமிக்கு வரும் பக்தர்கள் தங்க வசதியாக ஸ்ரீ கருப்பையா என்கிற ஸ்ரீ K.C.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் முயற்சியில் ஒரு கட்டிடம் உருவாகி அது ஸ்ரீராம பட்டாபிஷேக மண்டபமாக திகழ்கிறது. மேலும் 1988-ல் காஞ்சி பெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும். 1993-ல் காஞ்சி காமகோடி பெரியவர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும் வந்து அனுக்ரஹ பாஷணம் அருளினர். அதன் போதுதான் ஸ்ரீபெரியவர் இவ்வூர் பஜனையை ஒரு மாடல் பஜனை என்று அருள் பாலித்தார்கள்.

2001-ஆம் ஆண்டில் பஜனை மண்டபத்தில் உள்ள உணவுக் கூடம் விஸ்தாரமாகவும், நேர்த்தியாகவும், குறுகிய காலத்தில். அனைத்து ஸேவார்த்திகள் முழு முயற்சியில் கட்டப்பெற்றது. இப்பணி செவ்வனே பூர்த்தி அடைய ஸ்ரீராமநவமி வங்கி ஸ்தாபகர் ஸ்ரீஏகாம்பரம் ஸ்வாமிஜியின் சீரிய ஆலோசனை பெரிதும் உதவியது.

ஸ்ரீ ராமநவமி 100-வது வருஷ மஹோத்ஸவம் 2006-ம் ஆண்டு மிக சிறப்பாக நடைபெற்றது. அச்சமயம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விஜயம் செய்து அருளுரை வழங்கினார்கள்.

ஸம்ப்ரதாய விசேஷங்கள்

பந்தக்கால் நடுதல்

யுகாதிக்கு முதல்நாள் அம்மாவாசை அன்று காலை 06:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை செய்தபின் இரு கழிகளுக்கு மஞ்சள் தடவி சந்தனம், குங்குமம். புஷ்பம், மாவிலையால் அலங்காரம் செய்து பூஜித்து பின்னர் அதைப் பந்தக்கால்களாக நடுவார்கள்.

குரு ஆராதனை

அம்மூர் ஸ்வாமிகள் எனப்படும் ஒழுக்கை ராமஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமிகள் வெளியூரிலிருந்து வந்தவர் என்றும் இவ்வூர் பஜனையில் ஈர்க்கப்பட்டு அங்கேயே தங்கி அவ்வூர் பெரியோர்களுக்கு குருவாக இருந்தவர் அவ்வாறு இருந்த ஸ்வாமிகள் ஒரு யுகாதி நன்னாளில் ஸமாதி அடைந்தார். அவரின் பூஉடலை சாலை ஓரமாக உள்ள சுப்பிரமணிய ஐயருக்கு சொந்தமான அரசமரக் கழனி என்று அழைக்கப்பட்ட பெரிய அரசமரம் படித்துறையுடன் கூடிய கிணறு. மரத்தின் அடியில் நாகர் இவ்வாறு அமைந்த சூழலில் துளசி மாடத்துடன் ஸமாதியை அமைத்தனர்.

அதன் பிறகு தெலுங்கு வருடப்பிறப்பன்று ப்ரதமையில் குரு ஆராதனை நடந்து வருகிறது. இவ்வைபவம் பஜனை மடத்தில் காலை தோடய மங்களத்துடன் தொடங்கி அபிஷேகாதி பூஜா திரவியங்களோடு. நைவேத்தியங்களுடன், நாம ஸங்கீர்த்தனம் செய்து கொண்டு பருந்தாவனம் சென்று அபிஷேகம் பூஜைக்குப் பின் நாம ஸங்கீர்த்தனத்துடன், பஜனை மந்திரம் சென்று தீப ஆராதனைக்குப் பின் மங்களம் பாடி ப்ரசாதம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஸ்வாமிகளுக்கு கைங்காயம் செய்த லக்ஷ்மி அம்மாளுடன் வெங்கடரமண ஐயரின் சகோதரி ஞானாம்பா, மண்டகளத்தூர் விஸ்வநாத ஐயரின் பாரியான் ராஜக்கா என்கிற அலமேலு அம்மாள் ஆகிய இருவருக்கும் பாக்யம் கிடைத்தது. மேலும் ஆராதனை அன்று இரவிலிருந்தே தினம் ஸம்ப்ரதாயமாக நாம ஸ்மரணை (கர்போத்ஸவ மாக) செய்யப்படும்.

முதல் நாள் ஸ்ரீராமநவமி காலைக் கலச ஸ்தாபனம்

பஜனை மடத்தில சூரிய உதயத்தில் விக்னேஸ்வர பூஜையுடன் புண்யாஹவசனம் நடக்கும். பின்னர் ஒரு குடத்தை அலங்காரம் செய்து அதற்குண்டான மந்திரங்களை ஜபித்து அதை ப்ரதான கலசமாக ஸன்னதியில் ஸ்தாபிதம் செய்வார்கள். பின் ஸோமகும்ப ஜலத்தை விட்டு வாசானாதி திரவியங்கள் இட்டு ஷோடசோபசார பூஜை செய்து ஸ்தாபனம் செயவார்கள். இதனிடையில் ஐந்து ஸுமங்கலிகளைக் கொண்டு பாலிகை விடுதல் நடக்கும். இது அங்கூரார்ப்பணம் எனப்படுகிறது.

நியமனம்

அகண்டம் ஏற்றப்படும். இது லக்ஷ்மி ஸ்வரூபம். வேத பாராயணம், ராமாயண பாராயணம், உஞ்சவ்ருத்தி செய்பவரை நியமித்தல்.

தினம் நடக்கும் வைபங்கள்

1) உஞ்சவ்ருத்தி

2) ரிக், யஜுர், ஸாம, வேத பாராயணம், ராமாயண பாராயணம்.

3) நித்ய பூஜையில் ராம, கிருஷ்ண, லக்ஷ்மியஷ்டோத்ர அர்ச்சனை

4) விஷ்ணு ஸகஸ்ர நாமம், லக்ஷார்ச்சனையாக (ஐந்து நாள் பின்னர் பூர்த்தி ஹோமம்)

5) லலிதா ஸகஸ்ர நாமம்

6) மந்த்ரபுஷ்பம், நைவேத்தியம், தீப ஆராதனை

7) ஸந்தர்ப்பனை

மேற்குறித்த 2 முதல் 7 வரை காலை, மாலை இருவேளையும் நடக்கும். மந்த்ரபுஷ்பத்தின் ஸங்கீதம் அவதாரயா எனும்போது காலையில் தோடயமங்களம் வரையிலும் மாலையில் தோடயமங்களம் ஆரம்பித்து தொடர்ச்சியாக இரவு திவ்ய நாமம் ஹாரதி வரையிலும் பாடுவது வழக்கம் பவமான ஸுதுடுபட்டு என்கிற மங்களம் விடையாற்றி உத்ஸவத்தின் அன்று பாடப்படுகிறது.

8) மாலை ஸங்கீத உபன்யாசம் நடக்கும்.

ஏகாதசி - அகண்ட பஜனை

காலை உஞ்சவ்ருத்தியுடன் அகண்ட பஜனையாக துவங்கி மறுநாள் காலை துவாதசி உஞ்சவ்ருத்தியை முடித்து அன்றைய காலை பூஜையில் ஸங்கீத அவதாரயா எனும்போது பாடப்படும். ஜெய ஜெய ஹாரதி வரை அகண்ட பஜனை நடப்பது சிறப்பம்சமாகும்.

ஹோமம்

ஐந்தாவது நாள், அல்லது ஆறாவது நாள் லக்ஷார்ச்சனையை முடித்து விஷ்ணு காயத்ரி ஹோமம் நடக்கும். அத்துடன் நாராயண தர்ப்பணமும் நடக்கும்.

ஸீதா கல்யாணம்

காலை :

    உஞ்சவ்ருத்தி

2  உலூகல உத்ஸவம்

அ) முத்து குத்தல்

ஆ) அக்ஷதார்ப்பணம்

இ) மங்களாஷ்டகம்

இவைகள் நாம் ஸங்கீர்த்தனம், நைவேத்யம், தீப ஆராதனை.என்று க்ரமத்தில் நடைபெறுகிறது.

மாலை 04:00 மணிக்கு சந்தனம், குங்கும அக்ஷதையுடன் வாத்தியத்துடன் ஊர் அழைத்தல்.

06:00 மணிக்கு ஜானவாசம் ஸன்னதியில் உள்ள சிறிய ராமர் பட்டாபிஷேக படம், லக்ஷ்மி படம் இரண்டையும் அலங்கரித்து சீர் வரிசைகளுடன் ஊர்வலமாக பெண் வீட்டிற்கு எடுத்து வந்து நிச்சயதார்த்த பத்ரிகை வாசித்து, பாடல் பாடி ஹாரதி எடுத்து பின் ஸன்னதிக்கு ஊர்வலமாக வந்து பந்தலில் மாலை மாற்றுதல் நடத்திய பின் ஸன்னதியில் ப்ரவேசம். இதன் பின்னர் தாபையில் பகவானை ஆவாஹனம் செய்து சாஸ்திர ஸம்ப்ரதாயப்படி ஸீதா கல்யாணமும், தொடர்ந்து திவ்ய நாமமும் நடைபெறுகிறது.

பட்டாபிஷேகம்

1) ராமயண பாராயணம் ஸம்பூர்ணம்

2) ராமாயண பாராயணம் செய்தவரால் சொற்பொழிவு

3) ப்ரதான கலசம் உத்வாசனம் செய்தல்

4) கலச தீர்த்தம் வினியோகம்.

5) ப்ரார்த்தித்துக் கொண்டவர்க்கு கலச தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தல்.

6) பாணாம்பட்டு ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஐயரால் அன்றைய ஸந்தர்பணை

7) மாலை ரிக், யஜுர், ஸாம வேத பாராயணம் பூர்த்தி

8) பவ்வளிம்பு வஸந்த கேளிக்கை (மஞ்சள் நீராடல்)

9) நாம் ஸங்கீர்த்தனத்துடன் குளத்திற்கு சென்று வருதல்

10) இரவு உத்சவ ராமா படத்துடன் வீதி ஊர்வலம்.

11) வீதி ஊர்வலம் முடிந்ததும் ஸன்னதியில் உள்ள நிர்மால்யங்களை அகற்றி புதிய மாலைகள் சாற்றி அலங்காரம் செய்து வைத்தல். சிறிய ராமர், லக்ஷ்மி / ஆஞ்சநேயர் படங்களை மறுநாள் பாகவதாள் ஆராதனைக்காக தயார் செய்து வைத்தல்.

பாகவதாள் ஆராதனை

1) விடியற்காலை 03:00 மணியளவில் பாகவதர்களால் திவ்ய நாம பஜனை

2) 05:30 மணிக்கு தீபத்தை ஸன்னதியில் சமர்ப்பித்தல்

3) நிர்மாலயங்களோடு பாலிகையை எடுத்துக் கொண்டு குளத்திற்கு சென்று நிர்மாலியத்தை குளத்தில் சேர்த்து பாலிகையை கரைத்தல், கருட தரிசனம் செய்த பின் வீதியில் நாம் ஸங்கீர்த்தனத்துடன் வருதல்.

4)  லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் தரிசனம்.

5)அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாகவதாள் ஆராதனையை அந்த அந்த வீட்டிற்குரிய பாடல்களை பாடி நடைபெறும்.

6) மேற்கிலிருந்து பாகவதாள் ஆராதனையோடு கிழக்காக செல்லும்போது ஸ்ரீ ராமசேஷய்யர் வீட்டு ஆராதனையுடன் நிறுத்தி பாகவத கோஷ்டி சிவன் கோவில் தரிசனத்தை முடித்து திரும்பவும் பஜனை மடத்தை நோக்கி பாகவத ஆராதனை தொடர்ந்து நடக்கிறது.

7) மாலை ஆஞ்சநேயர் (பரம்பரையாக) வரும்வரை பஜனை நடக்கும்

8) இரவு விடையாற்றி உத்ஸவம், தோடய மங்களம், 5 ஆஞ்சநேய பாடல்களுடன் ஸ்ரீ ராமநவமி வார்ஷிகா உத்ஸவம் நிறைவுறுகிறது.

9)  பின்னர் மங்களம் (பவமான)

- சுபம் -

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...