Thursday, January 1, 2026

அபரகார்யம் - அந்த்யேஷ்டி (அபரகர்மா)

 

அந்த்யேஷ்டி (அபரகர்மா)

எல்லோரும் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளோம். மனிதன் பிறந்த நொடி முதல் மரணத்தை நோக்கி நடைபோடுகிறான் என்பதே அது, ஆனால் ஒருவர் இறந்துவிட்டார் என்று தீர்மானிக்க மனம் வருவதில்லை, அவன் பரலோகம் அடைந்தான். அவன் நித்ய ஜீவனாய் இருக்கிறான். அநித்யமான உடலே நீங்கியது என்பதே சத்யம். ஜீவன் நல்ல கதியை அடைந்துவிட்டான் என்பதில் தான் இறந்தவரின் பந்துக்களுக்கு மனச்சாந்தி உண்டாகிறது. ஒரு ஜீவன் பாபியாக இருந்தால் பாப பலனை அனுபவிக்க நரகத்தை அடைவான் என்றும், புண்ணியவானாக இருந்தால் புண்யபலனை அனுபவிக்க ஸ்வர்கத்தை அடைவான் என்றும் வேதம் சொல்கிறது.

அதாவது 100% சதவிகிதம் புண்யம் செய்தால் ஸ்வர்க்கம், 100% சதவிகிதம் பாபம் செய்திருந்தால் நரகம். பாதி புண்யம். பாதி பாபம் என்றால் மனுஷ ஜன்மம். பாபமே மிகுதியாக செய்திருந்தால் மிருக ஜன்மம் என்று பொதுவாக கூறலாம்.

மேலும் பல ஜன்மாக்களில் செய்யும் தபஸ், புண்ய குவியலினால் தேவதைகளுடைய லோகத்தை அடைவது ஸாலோக்யமாகும். தேவதைகளின் ஐஸ்வர்யத்தை அடைவது ஸார்ஷ்டிதமாகும். தேவதைகளாகவே ஆகிவிடுவது ஸாயுஜ்யமாகும். இவ்வாறு அவரவர் புண்யத்திற்கு தக்கபடி பலன் கிடைக்கும்.

நல்ல கதி

இறந்து போனவன் நரகத்தையடையாமல் புண்ணிய லோகத்தையோ அல்லது மறுபிறவியில் சுகானுபவம் பெற உதவி புரிவதற்காகவே அபர கர்மா செய்யப்படுகிறது. புத்திரன் (அல்லது மற்ற பந்துக்களோ) இறந்தவருக்காக முறைப்படி செய்யும் அபர கர்மாக்களை பொறுத்தும், இறந்தவன், தான் வாழ்ந்த காலத்தில் செய்த, தான தர்மங்கள், கர்மானுஷ்டானங்கள் போன்ற பலன்களைப் பொறுத்தும் ஜீவன் நல்ல கதியை அடைவதோடு, மறுபிறவி ஏற்பட்டாலும் நல்ல பிறவியை அடைகிறது என்று கூறுகிறது சாஸ்திரம். சுருக்கமாகச் சொல்வதென்றால் இறந்துபோன ஒரு பிறவி நல்ல கதியை அடைய வேண்டும் என்றால் செய்ய வேண்டிய அபர கர்மாவை புத்திரன், தனது சக்திக்கு மேல், எந்தக் குறையுமில்லாமல் செய்ய வேண்டும். கர்மாவை செய்யாவிடில் இறந்தவர் பிரேத சரீரத்திலிருந்து விடுபடுவதில்லை. சுகானுபவம் இல்லை, துக்கத்திலேயே மூழ்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய துக்கத்தைப் போக்காத வரையில் குடும்பத்திற்கு க்ஷேமம் கிடைப்பதில்லை.

இரண்டு விதமான ஸம்ஸ்காரம்

பொதுவாக க்ருஹஸ்தர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு சரம ஸம்ஸ்காரம் (சரம என்றால் இறுதி என்று பொருள்) அல்லது அபர க்ரியைகள் என்று சொல்லப்படுவதை இரண்டு விதமாக ரிஷிகள் நமக்கு வகுத்து அளித்துள்ளனர். ஒன்று பிரம்மமேத ஸம்ஸ்காரம். மற்றொன்று பைத்ருமேதிக ஸம்ஸ்காரம். இறந்தவர் வேதாத்யானம் செய்தவராக இருந்து கர்மா செய்கிறவருக்கும் வேத மந்திரங்கள் பரிச்சயம் இருக்குமேயாகில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் செய்வது விசேஷம். மற்ற எல்லோருக்கும் பொதுவான பைத்ருமேதிக விதானத்தில் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் என்பது சட்டம்.

இந்த அபர கர்மா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. சுபஸ்வீகாரத்துடன் சேர்த்தால் இது மொத்தம் 13 நாட்களாகும்.

ஸம்ஸ்காரத்தின் மஹிமையும், பலனும் மிகவும் உயர்ந்தது. இவைகளை பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு முறைப்படி செய்வது தாய், தந்தையர்க்கு பிள்ளையாக பிறந்ததற்கு இதைவிட பிரதி உபகாரம் வேறொன்றுமில்லை எனக் கூறலாம். இதுவும் ஒருவிதமான கடன்தான். சிரத்தை மிகவும் அவசியம். சிரததை என்பது தளராத நம்பிக்கை. பித்ருக்கள் விஷயமாக நம்பிக்கையுடன் செய்கின்ற கார்யங்கள்தான் பித்ருகர்மா எனக் கூறினால் மிகையாகாது.

பித்ருகர்மாவை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1) உயிர்பிரிந்த நொடியிலிருந்து 12 நாட்கள் வரை செய்யப்படும் அபர கர்மா, 2) பிறகு தொடர்ந்து வருஷம்தோறும் அதே திதியில் செய்யும் சிராத்தம்.

முன்னது பிரேதத்திற்குப் பித்ரு நிலையைத் தருவது. இரண்டாவது பித்ரு நிலையில் உள்ளவருக்குத் திருப்தி அளிப்பது.

முழு ஒத்துழைப்பு

இந்த அபர கர்மாவில் ஜீவநாடியாக இருப்பவைகள் இரண்டு

1) மந்திரங்களுடன் சேர்ந்த ப்ரயோகங்கள்

2) தானங்கள்

முதலாவதைப் பற்றி கர்மாவை நடத்தும் சாஸ்திரிகள் பார்த்துக் கொள்ளுவார், நாம் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்தால் போதுமானது. ஒத்துழைப்பு என்றால் அவர் சொல்லும் மந்திரத்தை கூடுமான வரையில் ஸ்வரத்துடன் திருப்பிச் சொல்ல முயற்சி செய்வதும், அவர் கூறுகிற நோத்தில் நாம் தயாராக இருந்து இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ச்ரத்தையுடன் ப்ரயோகத்தை அவர் சொல்படி செய்வதும்தான். இரண்டாவதாக தானங்கள். இதன் அளவையும் தன்மையையும் கர்த்தா தான் முடிவு செய்ய வேண்டும். இது போதும் என்று யோசிக்காமல் முடிவு எடுத்தால் கர்மா நஷ்டமாக வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் செய்யும் தானங்கள் அளவிட முடியாத பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. வாங்கியளிக்கும் தான சாமான்கள் நல்லதாகவும். சிறந்ததாகவும் இருத்தல் அவசியம்.

மனசு வரவேண்டும்

மேலும் ஒன்று, சென்னை போன்ற மாநகரங்களில் தற்போது இல்லத்தில் இந்த அபர கர்மாவைச் செய்யப் பலருக்கு இடவசதி இல்லாமலிருக்கலாம். அதுபோது 12 நாட்கள் வரை பொதுச்சாவடிகளில் கர்மாவை நடத்தலாம். ஆனால் ஒன்று. அங்கு ஏழை, எளியோர்களுக்காக ஒருவேளை ஏதாவது இலவசமாக வசதி அளிக்க ஏற்பாடு இருந்தால் வசதியுள்ளவர்கள் அம்மாதிரி சலுகைகளைப் பெறவேண்டாமே! வசதியுள்ளவர்கள் த்ரவியம் (கைக்காக) செலவழித்தால்தான் கர்மா பூரண பலைத் தரும்.

இதில் சந்தேகம் வேண்டாம். பணத்தை வைத்துக் கொண்டு. அபரகர்மாவிற்கு செலவழிக்க மனசு வரவில்லை என்றால் இது நன்றி கெட்டச் செயலாகும். பிறகு வருத்தப்பட வேண்டிவரும்.

வசதி இல்லாத போது

சரி, பணவசதி இல்லாதவர்கள் என்ன செய்ய? என்ற கேள்வியும் எழலாம். கவலைப்பட வேண்டாம். உங்களாத்து சாஸதிரிகளை அணுகினால் அதற்குத்தக அவர் செய்து தருவார்.

 

பணம் அதிகம் இருந்தால் தான் கர்மா செய்யப்படும் என்பதில்லை. விரலுக்குத்தக்க வீக்கம் தான் வீங்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் எளிமையாக செய்தால், பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்களே தவிர, எந்த தோஷமும் வராது.

மனோபாவம்

ஒருவேளை அப்பா, அம்மா உயிருடன் இருக்கும்போது நாம் அப்படி, இப்படி இருந்திருந்தாலும், அவர்கள் மறைந்த பிறகாவது அவர்களுக்காக, அவர்கள் நற்கதியடைய கர்மாவை சரிவர செய்யாவிடின், பின் சந்ததிகள் கஷ்டப்படுவார்கள் என்பது பெரியோர்களின் வாக்கு. மொத்தத்தில் கர்மா பண்ணுவதும், சரியாக பண்ணாமல் இருப்பதும் அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொருத்தும், மனோபாவத்தைப் பொருத்தும் அமையலாம்.

நாம் தனிப்பட்ட முறையில் கவனமாக இருந்தால் போதும். நம்மால் இயன்ற வரையில் கர்மாக்களை விடாமல் அனுஷ்டிக்க முடிவு செய்தால் நமது குடும்பம் க்ஷேமமாக இருக்கும்.

வேதங்களும் சூத்திரங்களும்

கருணாமூர்த்திகளான ஆபஸ்தம்பர், போதாயனர், ஆஸ்வலாயனர், திராஹ்யாயனர் முதலான சூத்திரகார மகரிஷிகள் மஹா தபஸ் செய்து, நமக்காக எந்த தன்னலமும் இல்லாமல், ஜீவன்கள் நற்கதியடையவும், பித்ருலோக ஸாயுஜ்யம் அடைவதற்கும் அபர சூத்ரம் என்ற பெயரில் அதற்கான சட்ட திட்டங்களை வகுத்துத் தந்துள்ளனர்.

ஒவ்வொரு வேதத்திலும் பல சூத்திரங்கள் உள்ளன அதன் விவரம்:

வேதம்                                    - சூத்திரங்கள்

ருக் வேதம்                            - ஆஸ்வலாயனம் கௌஷீதகம்

கிருஷ்ண யஜுர் வேதம் - போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம்

சுக்ல யஜுர் வேதம்           - காத்யாயணம், ஸாம வேதம்

----------------------------

த்ராஹ்யானம் ஜைமினீயம்

மேலும் கருட புராணம் மூலமாக வியாஸ முனிவர் சரம ஸம்ஸ்காரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஜீவனின் சஞ்சாரத்தைப் பற்றியும் விரிவாக நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

நாம் பாக்கியசாலிகளாக இருப்பதனால் இன்றும் இந்த அபர கர்மாக்களை யதோக்தமாக செய்து வைக்கக்கூடிய சாஸ்திரிகள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பாவனை அளித்தாலும் தகும்.

இந்த கர்மா நடைபெறும் கால கட்டத்தில் நமக்கு லௌகிகத்திலும் மற்றும் வைதிகத்திலும் சந்தேகங்கள் எழலாம். லௌக்கமான சந்தேகங்களை ஓரளவிற்கு நிவர்த்தி செய்வதே நூலின் இந்தப் பகுதியின் நோக்கம். இதில் அளித்துள்ள விளக்கங்களில் மாறுபட்ட கருத்து தோன்றுமாகில் உங்களது பெரியோர்களை அணுகவும். அவர்கள் கூறுவதைச் செவிமடுக்குமாறு ப்ரார்த்திக்கின்றேன்.

இந்த ஜன்மாவில் செய்யும் புண்யமும், பாபமும்தான் நம்மைத் தொடர்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி அதிகமான புண்யம் செய்து இருந்தால் ஸ்வர்காதி அனுபவம் கிடைக்கிறது. அதிகமாக பாபம் செய்து இருந்தால் நரகாதி கஷ்டங்கள் ஏற்படுகின்றன. இந்த இரண்டில் எது குறைவோ அது முதலில் அனுபவிக்கப்பட வேண்டும். பிறகு மற்றவை.

நாம் செய்யும் நல்ல கர்மானுஷ்டான, தானதர்மங்களால் பாவ அனுபவத்திலிருந்து இறந்தவர்களுடைய ஆத்மாக்களை மீட்க முடியும் என்பது நமது சாஸ்திரம். இறந்தவருடைய உடலை எரித்தோ, புதைத்தோ விடுகிறார்கள், ஆனால் அவருடைய ஸூக்ஷ்ம சரீரமென்ற உள்ளுடம்புடன் (ஆத்மா எனப்படுவது) இறந்தவருடைய உயிர், இறந்தவர் போகும் லோகத்திற்குப் போய், செய்த புண்ய, பாபங்களின் பலன்களை அனுபவிக்கிறார். இந்த உள்ளுடம்பு என்ற ஸூக்ஷ்ம சரீரத்துடன் கூடிய உயிருக்கு இறந்தவருடைய அங்க அமைப்பு அப்படியே இருக்கிறது.

இறந்தவர்களுடைய ஆத்மா (உள்ளுடம்போடு உள்ள உயிர்) இறந்தவர்கள் சென்றிருக்கும் பித்ரு லோகத்தில் கஷ்டங்கள் அதிகமேற்படாமலிக்கவும், பித்ருக்கள் நல்ல லோகம் அடையவும் செய்ய வேண்டிய கர்மாக்களை நன்கு அறிந்து கொண்டு செய்தால்தான் அவர்களும் சுகம் அடைவார்கள்.

பிதாவிற்கு அனுகூலமாகச் செய்யும் கார்யங்கள் எல்லாம் 100 மடங்கு பலன் தருகிறது, மாதாவிற்கு அனுகூலமாக செய்யும் கார்யங்கள் எல்லாம் 1,000 மடங்கு பலனை அளிக்கிறது. உயிருடன் இருந்தபொழுது மாதா, பிதாக்கள் செய்வது மக்களைக் காக்கும் என்றால், அவர்கள் மறைந்தபின் அவர்களுக்காக மக்கள் செய்யாதது மக்களைத் தாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கர்மாவைச் செய்யாவிடில் இறந்தவர் பிரேத சரீரத்திலிருந்து விடுபடுவதில்லை. புண்ய சரீரம் கிடைப்பதில்லை. ஸுகானுபவம் இல்லை. துக்கத்திலேயே மூழ்கியவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் அவர்களுடைய துக்கத்தைப் போக்காத வரையில், நம் குடும்பத்திற்கு க்ஷேமம் கிடைப்பதில்லை. சந்ததிகள் ஏற்படாததும், அப்படி ஏற்பட்டாலும் ஊமை, குருடு, செவிடு, சித்தஸ்வாதீனம் இல்லாமை முதலிய அங்கஹீனங்களோடும் சந்ததிகள் கஷ்டப்படும்

நம்மை பூலோகத்திற்கு கொண்டு வந்து காப்பாற்றி, அடையாளம் காட்டிய, ஸ்தூல ஜீவ வஸ்துவான, இந்த சரீரத்திற்கு நாம் செய்ய முடிந்த, செய்ய வேண்டிய பிரதி உபகாரம்தான் முறையான தஹன கிரியை. சரீரத்தை மந்திர பூர்வமாக சுத்தி செய்வது, அக்னி பகவானுக்கு ஆஹுதியாகச் செய்யும் கர்மா இது.

இந்த சரீரம் நம்மால் உருவானதல்ல. நாம் இதன்மேல் சொந்தம் கொண்டாட முடியாது. ப்ருத்வி, அக்னியால் உண்டான இந்த உடல் மறுபடியும் அங்கேயே அர்ப்பணமாக வேண்டும். ஒருவேளை விபத்திலோ அல்லது வேறு காரணமாகவோ சரீரம் கிடைக்காவிடில் அதற்கும் மாற்று வழியை சாஸ்திரம் சொல்லியுள்ளது. அதன்படி செய்ய வேண்டும். ஆனால் எல்லாவற்றிற்கும் விதி விலக்குண்டு. ஏதாவது ஓரிரு உறுப்புக்களை தானம் செய்ய நேரிடுமாயின், அதற்குத்தக ப்ராயஸ்சித்தம் செய்து கர்மாவைத் துவங்கலாம்.

இப்போதைய நவீன சூழ்நிலையில் சரீரத்தைப் பரிசோதனைக்காக தானம் செய்வதோ, மெடிகல் காலேஜுக்கு பரிசோதனைக்காக உறுப்புக்களை அளிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.

உயிர் பிரிந்த மூன்றேகால் நாழிகைக்குள் (சுமார் மூன்று மணி நேரம்) தஹனம் செய்ய வேண்டும். ஒருவேளை தாமதமானால் 25 நாழிகைக்குள் (அதாவது 10 மணி நேரம்) பிராயஸ்சித்தத்துடன் தஹனத்திற்கு ஏற்பாடு நடக்க வேண்டும். தஹனம் முடிந்த கையுடன் தடாக தீர குண்டத்திலும் க்ரஹத்வார குண்டத்திலும் பாஷாண ஸ்தாபனம் (கல்லில் பிரேதத்தை ஆவாஹனம்) செய்து நித்ய விதியைத் துவங்க வேண்டும்.

கர்ண மந்திரம்

தஹனத்திற்கு முன் செய்யும் கர்மாக்களில் முதன்மையானது கர்ண மந்திரம். இந்த கர்ண மந்திரம் ஜீவன் மரணத் தருவாயிலேயே செய்ய முடிந்தால் நல்லது. அதாவது உயிர் பிரிவதற்கு முன்பே செய்ய முடியுமானால் செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் புத்ரன் (அல்லது கர்த்தா) இறந்தவரின் தலையை தனது வலது முழங்காலில் வைத்துக் கொண்டு வலது காதில் ஆயுஷ ப்ராணம்... என்று துவங்கும் வேத மந்திரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் பஞ்சாக்க்ஷரத்தையும் ஜபிக்க வேண்டும். இவற்றை உபவீதியாகவே செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் சில தானங்களை அளிக்க வேண்டும்.கோ, பூமி, திலம், ஹிரண்யம், தீபம், தீர்த்த பாத்திரம் ஆகியவற்றை தானமாக அளிக்க சொல்லப்பட்டுள்ளது.

தஹனம்

புத்ரன் (அல்லது கர்த்தா) ஒற்றை வஸ்த்ரத்துடன் (பஞ்சகச்சம்) ஸ்நானம் செய்து, ஈர வஸ்த்ரத்துடன் கர்மாவை துவங்க வேண்டும். ப்ரேத காரியங்கள் செய்யும் போது ஈர வஸ்த்ரத்துடனும், ஒற்றை வஸ்த்ரத்துடனும் தான் இருக்க வேண்டும்.

இறந்த 25 நாழிகைக்குள் தஹனம் செய்வது உசிதம். காலம் தாமதமானால் க்ருஸ்ர தானம் செய்து ஸம்ஸ்காரத்தைத் துவங்க வேண்டும். கூடுமானவரையில் காலல் செய்வதற்கு முயற்சி செய்யவேண்டும். சரீரத்தைப் புனிதமான அக்னியில் ஆஹுதியாக சேர்ப்பதுதான் தஹனம். ஆதலால் காலதாமதத்திற்கு இடம் தரக்கூடாது.

உதயத்திற்கு முன் 3 முகூர்த்தம், அதாவது இரவு ஒன்றரை மணிக்கு முன்பு இறந்தால் முதல் நாள் கணக்கு. சிலர் சூரிய உதயம் முதல் மறுஉதயம் வரை ஒரு நாளாக கணக்கிடுகிறார்கள்.

ஹோமத்துடன் கூடிய அனைத்துப் ப்ரயோகங்களும் முடிந்தவுடன் ஞாதிகள் பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு பிரேதத்தைப் பாடையுடன் எடுக்க வேண்டும். அது சமயம் கர்த்தா அக்னி சட்டியை எடுத்துக் கொண்டு முதலில் செல்ல வேண்டும்.

மயானம் சென்றடைந்ததும், ஞாதிகளும், கர்த்தாவும் பூணூலை இடம் போட்டுக்கொண்டு வாய்க்கரிசி போடவேண்டும். வேத மந்திரங்களுடன் சிதைக்குக் கிழக்கு புறத்தில் மேற்கு நோக்கி அக்னியை இட்டு தஹனம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து பிரஹ்மதண்டம், நக்ன ப்ரச்சாதன ச்ராத்தம், தஹனத்திற்கு அங்கமாக வபனம் (க்ஷவரம்) முதலியவைகள் உண்டு.

ஸ்தாபனம் (கல் ஊன்றுதல்)

தஹனம் முடிந்ததும் உடனே ஸ்தாபனம் செய்வது உத்தமம். தடாக தீரம், க்ரஹ த்வாரம் ஆகிய இரண்டு இடங்களிலும் கல் ஊன்றி நித்யவிதியைத் துவங்க வேண்டும்.

நித்ய விதி

சரீரத்தை எரித்து விடுவதால் சரீரத்தின் பிடிப்பு விட்டது என்றாலும், தஹனத்தால் சரீரத்தில் எரிவும், நாவறட்சியும்,

பசியும் பிரேதனுக்கு ஏற்படும். சரீர பந்தம் விலகினாலும். வாஸனையாக அமைந்த எண்ணம் விலகாது. திலோதக வாஸோதக தர்ப்பணாதிகளும், பிண்ட பிரதானமும், மற்ற சில கர்மாக்களையும் தினந்தோறும் இரண்டு இடங்களில் (தடாகதீரம், க்ருஹத்வாரம்) தொடர்ந்து 10 நாட்கள் செய்வதே நித்ய விதி.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம். நித்ய விதிக்கு உபயோகப்படுத்தும் வஸ்திரம், சொம்பு, பிண்டம் சமைக்கும் பாத்திரம், போடும் (அல்லது கரைக்கும்) இடம், தான் கட்டும் வேஷ்டி முதலியவற்றை மாற்றக்கூடாது. 10 நாட்களும் காப்பாற்ற வேண்டும். பிண்டத்திற்கான அன்னத்தைப் பொதுவாக தினந்தோறும் இறந்தவரின் பெண் ஸ்நானம் செய்து ஈர ஆடையுடன் சமைத்துத் தருவாள்.

நித்ய விதியில் ஏகோத்ர விருத்தி ச்ராத்தம் மற்றும் நவச்ராத்தம் என்று இரண்டு வகையான ச்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்யப்பட வேண்டும். ப்ராமணர்களுக்கு தேவையான அளவு அரிசி, பயறு, வாழைக்காய் ஆகியவற்றை தக்ஷிணையுடன் தினந்தோறும் கொடுக்க வேண்டும்.

அஸ்தி ஸஞ்சயனம் தஹனமான சரீரத்தின் அஸ்திகளை மந்திர பூர்வமாக புண்ணிய தீர்த்தத்தில் கரைக்கும் பகுதியே இது. மரித்த அன்றே தஹனம் நடந்தால் மறுநாள் செய்யலாம். அன்றே நடைபெறாவிடில் தஹனம் செய்த மறுநாள் ஸஞ்சயனம் செய்யலாம். இங்கு ஹோமம், ஜலமும் பாலும் கலந்து அத்தி இலைக் கொத்தால் அஸ்திக்கு அபிஷேகம் மந்திர பூர்வமாக நடைபெறும், பிறகு சிதைச் சாம்பலை ஒன்று கூட்டி அதை தெற்கில் தலை இருக்கும்படி உடல் உருவாக அமைத்து மயானத்திலுள்ள பூதங்கள் (கண்ணுக்குத் தெரியாத உயிர்கள்) பிரேதன் இலை திருப்தியடைய திண்பண்டங்கள், பொறி,கடலை, அப்பம், முறுக்கு, இளநீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். தொடர்ந்து அஸ்தி கலசத்துக்கு பாலினால் அபிஷேகம். பிறகு அஸ்தியை நதிகளில் கரைக்கலாம், வசதியும் ஸௌகரியமும் இருக்குமாயின் யாராவது தாயாதி அல்லது உறவினர் மூலம் காசி அல்லது ப்ரயாகத்தில் அஸ்தியைக் கொண்டு போட ஏற்பாடு செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று. மாதா, பிதா தவிர மற்றவரின் ஸஞ்சயனம் வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது.

10-ம் நாள் தசாஹம்

இன்று ஞாதிகள் அனைவரும் வபனம் செய்துகொண்டு ஸ்நானம் செய்து விரித்த தலையுடன், ஒரே ஈர வஸ்திரத்துடன், நதி தீர குண்டத்தில் வயதுக்கிரமமாக 75 திலோதக தானமும், 30 வாவோஸதக தானமும் செய்வர். ஞாதிகள் தர்ப்பணம் செய்த பிறகு கர்த்தா நதி தீர குண்டத்தில் வாஸோதகமும், பிண்ட பலியும் செய்ய வேண்டும். பிறகு ப்ரபூதபலி தர வேண்டும்.

ப்ரபூதபலி 10-ம் நாள் அன்று பிரேதன் கடும் பசிக்கு உள்ளாகியிருப்பதால் மிகுதியான அளவில் சாதமும், அப்பம், முறுக்கு போன்ற பக்ஷணங்களையும் தர்ப்பையின் மேல் அளிக்க வேண்டும். நெய், தேன், தயிர், ஜலம் முதலியவற்றையும் அதன் மேல் ஊற்றி இதனை பிரேத ஜீவன் ஏற்கும்படி கூறி எங்கள் குலம் வளரட்டும் என்று பிரார்த்தித்து தெற்கு முகமாக நமஸ்கரிக்க வேண்டும். ஸ்திரீகளும் தலை விரித்துக் கொண்டு உணவளித்து வருந்துவர்.

பிறகு தடாக தீர குண்டத்திலும், க்ருஹத்வார குண்டத்திலும் ஸ்தாபனம் செய்த கல்லை மந்திரபூர்வமாக பாஷாணத்திலிருந்து வெளியேற்றும்படி கோரிப் பாஷாணத்தை குழியிலிருந்து எடுத்து விட வேண்டும்.

இதுவரை செய்த கர்மம் பலன்பெற வேண்டி பிராமணர்களை பிரதக்ஷிணம் செய்து வணங்க வேண்டும்.

பிறகு வபனம் (க்ஷவரம்). ஸ்நானம் செய்ய வேண்டும்.

சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம்

மாத்யாஹ்னிகம் செய்துவிட்டு சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம் எனும் இரண்டு ஹோரமங்களை செய்ய வேண்டும். ஸாம வேதிகளுக்கு இந்த இடத்தில் ஒரு ஹோமம் தான் சொல்லியுள்ளது.

செடி நடுதல்

இந்த இரண்டு ஹோமங்கள் நடுவில் கர்த்தா ஏதாவது ஒரு இடத்தில் ஒரு செடியை நடச் சொல்லியுள்ளது. அன்று இரவில் அப்பம், பொறி உருண்டை முதலியவற்றைத் தானம் செய்யவும்.

சரம ஸ்லோகம்

சரம என்றால் இறுதி என்று பொருள். யாருக்கு கர்மா நடைபெற்றதோ, அவர் இறந்த நாள் விபரங்களும், அவரைப் பற்றியும் ஸ்லோகம் வாசிப்பார். இறந்தவருடைய நற்கர்மாவினாலும். புத்ரன் சிரத்தையுடன் செய்த கர்மாவின் பயனாலும் அவர் கைலாஸம் அல்லது வைகுண்டம் அல்லது ஸ்வர்க்கம் அல்லது பிரம்மலோகம் அடைந்தார் என்று வாத்யார் உபந்யாசம் செய்வார். அது சமயத்தில் தொடர்புடைய தர்ம சாஸ்திரங்களும் உபந்யாஸத்தில் இடம்பெற, கூடியிருக்கும் உறவினர்கள் செவிமடுப்பார்கள். (இந்தச் சடங்கை சிலர் குலாச்சாரப்படி 13-ம் நாள் சுபஸ்வீகாரத்தன்று நடத்துவர்).

பதினோறாவது நாள் - வ்ருஷபோத்ஸர்ஜனம்

பத்து நாட்களும் ப்ரேத சொரூபமாக இருந்த ஜீவனுக்கு பசி அதிகமாக இருக்கும். ஆதலால் 10-ம் நாள் ப்ரபூதபலி போட்டு ஜீவனுடைய பசியை அடக்குகிறோம், பதினோறாம் நாள் பிரேதத்தை நிவர்த்தி பண்ண ஆகாரம் தரவேண்டும். அதற்குறிய சக்தி அங்கே இருந்து வாங்கிக் கொள்ளும் பிராமணனுக்கு இல்லை. அதன் வீர்யம் மிகுதி. அதன் நிமித்தம் அக்னியில் பிரேத ச்ராத்தம் பண்ணி வைத்து, பிறகு பிராமண போஜனமும் செய்விக்க வேண்டும்,

அதற்குமுன் ஜீவனுக்கு பைஸாச கஷ்டம் போவதற்காகவும் ருத்ரலோக ப்ராப்திக்காகவும் ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ ருத்ர ஜபம், ருசாம் ப்ராசி... என்று துவங்கும் வேத மந்த்ரம் கூடிய கண்ணுக்குட்டி பூஜையும் நடைபெறும்,

இந்த இடத்தில் தான சதுஷ்டயம் என்று கூறும் எள்ளு, ஜலம், ஹிரண்யம், வஸ்த்ரம் ஆகிய நான்கு வகையான தானங்கள் செய்ய வேண்டும்.

பல அபரகர்மா என்று கூறும் இந்த நாட்களில் பிரயோகங்கள் அடங்கி உள்ளதைப் பார்த்து வருகிறோம். எல்லா மந்த்ரங்களும் அர்த்த புஷ்டியும், இறந்த ஜீவனுக்கு நற்கதியடைய உதவுவதற்கும் புத்ரன் முதலிய சந்ததியினர் நன்கு வாழ்வதற்கும் உதவி புரிகின்றன.

ஏகோதிஷ்டம் - ஆத்ய மாஸிகம் - தொடர்ந்து ஏகோதிஷ்டம்

எனும் சிராத்தம் நடைபெறும். ஏகோதிஷ்டத்தில் இறந்தவரது ப்ரேதத்தை ஆவாஹனம் செய்து ச்ராத்தம் செய்வதால் பிராம்மணர் எவரும் அதற்கு வரமாட்டார். வந்தாலும் அவர் தமது வாழ்நாள் வரை ஜீவிக்க திரவ்யம் தர வேண்டும். ஆதலால் அக்னியில் செய்வது வழக்கம். 32 கபளம் அக்னியில் சாதத்தால் ஹோமம் நடைபெறும். 22 ஆவிருத்த ஆத்ய மாஸிகம் மேலே ஆத்ய மாஸிகத்தைப் பற்றி பார்த்தோம். இதையே இரண்டாவது முறை செய்வதுதான் ஆவிருத்த ஆத்ய மாஸிகம். தகுந்த பிராமணனும் திரவியமும் சாத்யமில்லாததால் அக்னியில் 32 கபளம் மூலம் ஹோமம் செய்தோம் அல்லவா? அதையே முறையாக ஒரு பிராம்மணனை வைத்து சிராத்தத்தில் செய்வது போல் எல்லாவிதமான உபசாரங்களுடன் போஜனம் அளிப்பதே இந்தக் கிரியை. இத்துடன் 11ம் நாள் கர்மா முடிவடைகிறது.

ஸபிண்டீகரணம் -12-ம் நாள்

இறந்தவர்கள் ஜீவன் பிரிந்தது முதல் ப்ரேத ரூபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் தணிவதற்கு முதல் 9 நாட்கள் நித்யவிதி கார்யங்களும் தொடர்ந்து 10-ம் நாள் கர்மாவும் செய்யப்படுகின்றன என்பதை ஆரம்பத்திலிருந்து இதுவரை பார்த்தோம். 11-ம் நாள் செய்யும் கிரியையினால் பிசாச பாதை நிவர்த்தியாகி பிரேத உருவம் அழிந்து ருத்ர லோக ப்ராப்தி கிடைக்கின்றது. எல்லா ஞாதிகளுக்கும் (தாயாதிகள்) ஆசெரிசம் (தீட்டு) 11-ம் நாள் அகல்கின்றது, ஆனால் கர்த்தாவிற்கு தீட்டு போனாலும் 12-ம் நாள் செய்யப்படும் ஸபிண்டீகரணம் நடைபெறும் வரை தேக சுத்தி கிடையாது, மேலும் ஸபிண்டீகரணம் செய்யாவிடில் நாம் செய்யக்கூடிய தானதர்மங்கள் யாவும் இறந்தவரை அடையாது. அதற்காக இதை அவசியம் நன்கு செய்ய வேண்டும்.

மரணமடைந்தவர் பிரேத நிலை நீங்கப்பெற்று பித்ரு நிலை பெற மாற்றம் தேவை, இந்த நிலை மாற்றத்திற்கு உதவுவதே ஸபிண்டீகரணம். இந்த கர்மாவை விதிப்படி நன்கு அறிந்து சிரத்தையுடனும் நியமத்துடனும் தன் சக்திக்கு குறைவில்லாமல் த்ரவ்யத்துடன் அனுஷ்டிப்பது மிகவும் அவசியம்.

மூத்தவனுக்கு மனைவி இல்லாமலிந்தாலோ அல்லது பிரம்மச்சாரியாக இருந்தாலோ மனைவியுள்ள அடுத்தவன் அவனது ஒளபாஸன அக்னியில் செய்யலாம். ஒருவேளை தம்பி இல்லாதவராயின் மூத்தவன் பிரம்மச்சாரியாக இருந்தாலும் செய்யலாம்.

ஸபிண்டீகரணத்தில் பிதாமஹாதிகளை வரணம் செய்து சிராத்தத்தில் செய்வது போல் அர்க்ய பாத்யாதி உபசாரங்கள், ஹோமம், போஜனம், பிண்டதானம் முதலியவற்றையும் தொடர்ந்து பிண்ட சம்யோஜனம் (ஜீவனை அவரது முன்னோர்களான பித்ருக்களோட சேர்ப்பிப்பது), பாதேய சிராத்தம் முதலியவைகள் நடைபெறும்.

அதாவது ஸபிண்டீகரணத்தன்று நடைபெறும் கிரியைகளை வரிசையாகப் பார்ப்போம்.

புண்யாஹவாசனம்

அக்னி ஸந்தானம்

ஆமருப பஞ்சதச மாஸிக ச்ராத்தம்

ஸபிண்டீகரண ஆரம்பம்

அர்க்ய க்ரஹணம்

ப்ராம்மணாளுக்கு வஸ்த்ராதி உபசாரம்

அன்னஹோமம்

உபஸ்தானம்

அன்னாபிமர்ஸனம்

பிராம்மண போஜனம்

த்ருப்தி ப்ரஸ்னம்

விகிரான்னம்

வாயஸ பிண்டம்

தாம்பூலம், தக்ஷிணை

நிமித்த பிராம்மணரை அனுப்புதல்

பிண்ட பிரதானம்

அர்க்ய ஸம்யோஜனம்

பிண்ட த்ரேதாகரணம்

வைதரணி கோதானம், இதர தானங்கள்

பிண்ட ஸம்யோஜனம், உபஸ்தானம்

பாதேய ச்ராத்தம், தானம்

ஸோதகும்பம்

தானங்கள்

இதில் தானங்கள் பற்றி ஒரு வார்த்தை. ஸபிண்டீகரணத்தில் தானத்தின் மஹிமை மிகவும் சக்தி வாய்ந்தது. பலவிதமான தானங்கள் சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரையில் எல்லா தானங்களையும் சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பஞ்சதானங்கள், தச தானங்கள் என்பது திரவிய தானங்கள், தடி, குடை, கமண்டலம், பாதரட்சை, படுக்கை, ஆசனம், வாகனம், விபூதி, வில்வம், துளசி, கம்பளம் என்று பலவிதமான தானங்கள் இதில் அடங்கும்.

இதைத் தவிர யம தர்மராஜாவின் சபையில் உள்ள 12 சிரவணர்களை உத்தேசித்து 12 பொருட்களில் (வெள்ளிக் கிண்ணம், உதகும்பம், அரிசியுடன் பாத்திரம் போன்றவை) ஏதாவது ஒன்றை 12 பிராம்மணர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

யம சபையில் இருக்கும் இந்த த்வாதச சிரவணர்களின் பெயர்கள்…

1) கர்மாதிபன், 2) தராத்யக்ஷன், 3) தர்மராஜன், 4) தநஞ்சயன், 5) தர்மகுப்தன், 6) தர்மஜீவன், 7) தர்மக்ருன், 8) தர்மநக்தன், 9) நீதிமார்கன், 10) அர்த்தவாதன், 11) ஸத்யவான், 12) ஞானலோசனன்.

இவர்களைத் திருப்திபடுத்தி இவர்களை உத்தேசித்து செய்யும் இந்த தானங்கள் மிகவும் விசேஷம்.

ஸோதகும்பம்

ஸபிண்டீகரணம் முடிந்ததும், அது நடந்த இடத்தை நன்கு அலம்பி சுத்தம் செய்துவிட்டு ஸோதகும்பத்தைத் துவங்க வேண்டும். இதில் ஒரு பிராம்மணருக்கு போஜனம் செய்விக்க வேண்டும். அனேகமாக ஆத்து வாத்யார் இதில் பங்கேற்பார்.

பிதா (அல்லது மாதா) முதலிய மூவரைக் குறித்துச் செய்கின்ற சிராத்தமே ஸோதகும்பம். இதில் ஹோமம் கிடையாது. சங்கல்ப விதமாக நடைபெறும். போஜனமும் சமாராதனை ரூபமாக இருப்பது வழக்கத்தில் உள்ளது. கர்த்தாவிற்கும் போக்தாவிற்கும் சிராத்தத்தில் உள்ள நியமங்கள் இல்லை. 12-வது நாளன்று துவங்கி ஆப்திகம் வரை இதை மாதாமாதம் மாஸிகத்திற்கு முதல் நாள் செய்வது சம்ப்ரதாயத்தில் உள்ளது. (இதை நித்ய ச்ராத்தமாக ஆப்திகம் வரை செய்வது சலாக்யம்).

சுபஸ்வீகாரம்

பொதுவாக 13-ம் நாள் நடைபறும். இன்று மங்களகரமாக வீட்டு வாசலில் கோலம் போட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி வாசலில் மாவிலை தோரணம் கட்டி இது துவங்கப்படும்.

உதகசாந்தி,மந்திர ஜபம். நவக்ரஹ ஹோமம், கர்த்தாவிற்கு அபிஷேகம் முதலியவைகள் நடைபெறும். முடிவில் சந்தனம், குங்குமம், புஷ்பம் முதலிய மங்கள த்ரவியங்களை வாத்யார் மந்திரங்களுடன் கர்த்தாவிற்கும் அவரது மனைவி மற்றும் கூடியுள்ள அனைவருக்கும் வழங்குவார். புத்தாடையும் உடுத்திக் கொள்வார்கள். ப்ராம்மணர்கள் ஆசீர்வாதத்துடன் எல்லோரும் அக்ஷதையைப் பெற்றுக் கொள்வர். பிராம்மண போஜனமும் சமாராதனை ரூபமாக செய்வித்து மங்களமுண்டாகக் கோரி வணங்குவர்.

இறந்த ஓராண்டு வரை க்ஷவரம், அப்பியங்கம், தாம்பூலம், உடல் உறவு கொள்வதில்லை. இதுதான் தீக்ஷை. ஆப்திகம் முடியும் வரை கோவில்களுக்கு செல்வதில்லை. விசேஷ ப்ரார்த்தனைகளோ. ஹோமங்களோ கூடாது. ஆனால் க்ருஹத்தில் நித்ய பூஜை வழக்கம் போல் செய்யலாம்.

ஆப்திகம் வரை செய்யப்படும் கர்மாக்கள்

ஸோதகும்பம் - இது நித்யம் செய்ய வேண்டியது ஆகும். ஆனால் அது பலருக்கு சாத்தியமில்லை என்பதால் மாஸிகத்திற்கு முதல் நாள் செய்கின்றனர். தீர்த்தம் நிரம்பிய பாத்திரம், இளநீர், வஸ்த்ரம் முதலியவைகளை ஒருவருக்குத் தானம் அளித்து சமாராதனை போஜனம் செய்விக்க வேண்டும். ஹோமம் கிடையாது.

மாஸிகம் ஊனமாஸிகம் வருஷத்தில் மாதாமாதம் இறந்த திதியில் ஹோமத்துடன் செய்வதே மாஸிக சிராத்தம். இதில் இரண்டு பேர் சாப்பிடுவார்கள்.

நான்கு ஊன மாஸிகங்களும் நடைபெறும். அதாவது 1) 27-30 நாட்களில், 2) 40-45 நாட்களில், 3) 179-180 நாட்களில், 4) 340-355 நாட்களில் ஒருநாள் என நான்கு ஊன மாஸிகங்கள். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளிக்கிழமை, கிருத்திகை, கேட்டை, ஆயில்யம், முப்பூரம் இவைகளில் ஊனமாஸிகம் செய்வதில்லை. ஆனால் குறிப்பிட்ட நாட்களில் நாள் கிடைக்காவிடில் காலம் முடியும் முன்பு நாள் எப்படியிருந்தாலும் செய்துவிடலாம்.

வருஷ கடைசியில் ஸோதகும்பம், ஆப்திகம், சுபஸ்வீகாரம் முதலியவைகளுடன் இந்த கர்மா முடிவடைகின்றது.

சில பொதுவான விளக்கங்கள்

கேள்வி: ஞாதிகள் என்பவர்கள் யார்?

பதில்: இவர்களை இருவகையில் பிரிக்கலாம். முதலாவது ஸபிண்டர்கள். அதாவது 10 நாள் தாயாதர்கள். இரண்டாவது ஸமானோதர்கள். அதாவது 3 நாள் தாயாதர்கள். இதில் குறிப்பாக 10 நாள் தாயாதார்கள் 7-வது தலைமுறையில் உள்ளவர்கள் ஆவர்.

கேள்வி: 7 தலைமுறை என்பதை எப்படித் தெரிந்துக்கொள்வது?

பதில்: ஒருவனுக்கு பிதா, பிதாமஹன், பிரபிதாமஹன், புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், இவன் உள்பட மொத்தம் 7 தலைமுறையாகும்.

கேள்வி: ஆசௌசம் என்றால் என்ன?

பதில்: ஆசௌசம் என்றால் தீட்டு. அதாவது அசுசியாயிருக்கின்ற நிலை. ஒரு மனிதன் பிறந்தாலோ, இறந்தாலோ அவனுடன் உறவுள்ளவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படுவதுதான் இந்த அசுசி. இது பலவகைப்படும். ஆனால் எல்லா தீட்டும் ஒரு காலவரையால் அகலும். ஸ்நானம் செய்வதால் அகலும்.

கேள்வி: தீட்டுக்காரர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்?

பதில்: கோவிலுக்குள் போகக் கூடாது.

தீட்டுக்காரன் தீட்டில்லாதவனையும், தீட்டில்லாதவன் தீட்டுக்காரனையும், நமஸ்காரம் செய்யக்கூடாது.

மரணத் தீட்டுக்காரர்கள் தினமும் ஸ்நானம் செய்ய வேண்டும். தரையில் படுக்க வேண்டும். ஸ்திரீ ஸங்கமம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

தீட்டு அனுஷ்டிக்கும் காலத்தில் சந்திர, சூரிய க்ரஹணங்கள் ஏற்பட்டால் க்ரஹணம் முடியும் வரையில் சுத்தம். ஆதலால் அது போது செய்ய வேண்டிய தானங்கள், ஜபங்கள், தர்ப்பணங்கள் முதலியவற்றை செய்யலாம்.

தீட்டுள்ள ஒருவனது இல்லத்திற்கும், அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

சிசுக்கள் இறந்து கனணம், அதாவது புதைத்தல், செய்வதாக இருந்தால் கனணம் செய்த முதல் தீட்டு ஆரம்பிக்கும். இறந்ததும் அல்ல.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தீட்டுக் காலத்தில் விரதத்தை விடக்கூடாது. அனுஷ்டிக்கலாம்.

இந்த ஆசௌசம் பிரம்மச்சாரிக்கு கிடையாது.

தீட்டுள்ளவர்கள் தானம் கொடுப்பதும், வாங்குவதும் கூடாது.

தேவ பூஜை, ச்ராத்தம் தர்ப்பணம் செய்யக்கூடாது.

ஸந்தியாவந்தனத்தை விடாமல் சுருக்கமாக செய்ய வேண்டும்.

கேள்வி : தீட்டுக் கணக்கை எப்படிக் கணக்கிடுவது?

பதில்: இரவில் ஜனனமோ, மரணமோ ஏற்பட்டால் அது 18 ¼ நாழிக்கு (அதாவது இரவு சுமார் 16 மணி) முன்னிருந்தால் முதல் நாள் கணக்கு. பிறகு இருந்தால் மறுநாள் கணக்கு. ஆனால் சிலர் சூரியோதயத்திலிருந்து நாளைக் கணக்கிட்டு நிர்ணயம் செய்வார்கள். தேசகுலாசாரப்படி முடிவு செய்யலாம்.

கேள்வி: ஜீவன் பிரிந்ததும் கூடஇருக்கும் பெரியோர்கள் (உறவினர்கள்) யாராவது கர்மாவை சுருக்கிச் செய்தால் போதும் என்று கூறினால் கர்த்தா என்ன செய்வது?

பதில்: ஒன்றும் செய்ய முடியாது. ஒருவேளை அதுபோது

சாஸ்திரிகள் வாய் திறந்தால் அவருக்கு கெட்ட பெயர் வரலாம். பையன்தான் இறுதி முடிவு உறுதியாக எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவ்வளவுதான் "பிராப்தம்" என்று விட்டு விட வேண்டும். சர்ச்சை, விவாதம் கூடாது. இதில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஓரிரு இடங்களைத் தவிர பொதுவாக இந்த அபர கர்மா செய்ய நேரிடுவது திடீர் என்றுதான். மற்ற சுபகார்யங்கள் போல் திட்டமிட்டு வருவதில்லை. மேலும் மீளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம் அது. ஜாக்கிரதையாக கையாள வேண்டும். கர்த்தாவை ஒரேயடியாக குறை சொல்லக்கூடாது. பொதுவாக நாம் எவ்வளவோ விஷயங்களை பற்றி படிக்கின்றோம். விவாதம் செய்கின்றோம். அதே மாதிரி இந்த விஷயத்திலும், அபசகுனம் என்று கருதாமல், நேரம் கிடைக்கும் போது இதில் கவனம் செலுத்தினால் பாதி பிரச்சனை தீரும். மனோபாவம்தான் காரணம்.

கேள்வி: உயிர் பிரியும் நேரத்தில் எதெல்லாம் தோஷங்கள்? பிராயஸ்சித்தம் உண்டா?

பதில்: அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம் இவற்றில் மரண தோஷமுண்டு. இறந்தபின் 25 நாழிகைக்களுக்குள் (10 மணிக்குள்) தஹனம் செய்ய முடியாமை, இடி, விஷம் முதலியவற்றில் மரணம் நேர்தல், அசுசியான ஆடையுடித்திருத்தல், தரையில் அல்லாமல் கட்டில் போன்றவைகள்மேல் உயிர் பிரிதல், நடு ராத்திரியில் மரணமடைதல், நித்யகர்மாக்களை செய்ய முடியாமை, இவையும் தோஷமே. எல்லாவற்றிற்கும் பிராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.

கேள்வி: கர்மா செய்து வைக்க திடீரென்று இறந்தவரின் சூத்திரத்தை சேர்ந்த சாஸ்திரிகள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

பதில்: அந்த சூத்திரமரிந்தவர் கிடைக்காவிடில், வேறு சூத்திர மறிந்தவர் கிடைத்தால் அதன்படி செய்யலாம். 12-வது நாளான த்வாதஸேஹணியை இறந்தவரது சூத்திரப்படிதான் செய்ய வேண்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.

கேள்வி: 13-ம் நாள் அன்று சுப ஸ்வீகாரம் ஆனபிறகு ஆப்திகம் வரை செய்ய வேண்டிய கர்மாக்கள் யாவை?

பதில்: பூர்வ சரீர வாஸனையால் மரித்தவருக்கு தாகமும் பசியும் நடு நடுவே வரக்கூடும். அந்த பீடை நீங்க ஆண்டு முழுவதும் மாஸிக, ஊனமாஸிகங்கள் செய்ய வேண்டும். மாஸிகங்கள் மாதா மாதம் இறந்த திதியில் செய்ய வேண்டும் ஊன மாஸிகங்கள் மொத்தம் நான்கு. (27-30 நாட்களில், 40-45 நாட்களில், 179-180 நாட்களில் 360-365 நாட்களில் ஏதாவது ஒருநாள் பார்த்துச் செய்ய வேண்டும்) மாதா மாதம் செய்யும் மாஸிகத்திற்கு முன் ஸோதகும்பம். இதுவும் ஒரு வகையில் ச்ராத்தம் தான். ஆனால் ஹோமம் கிடையாது. அன்று ஒரு பிராமணரை மட்டும் பித்ருவர்ணமாக வரித்து போஜனம் செய்விக்க வேண்டும்.

வருஷ இறுதியில் ஸோதகும்பம், ஆப்திக சிராத்தம், சுபஸ்வீகாரம், விஸ்தாரமாக செய்வதுடன் கர்மா பூர்ணமாகின்றது.

கேள்வி : இறந்தபின் தீட்டு காக்கிறார்களே, அது எவ்வளவு நாட்கள்?

பதில் : இறந்த நபருக்கும், உங்களுக்கும் இருக்கும் உறவைப் பொறுத்து தீட்டு நாட்கள் அமையும். விபரங்களை கீழ் அட்டவணையை (நன்றி: "ஸ்வதர்மம்) பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஆனால் ஒன்று. இருக்கிற தீட்டை காக்காமல் இருப்பது பாவம். அதே மாதிரி இல்லாத தீட்டை காக்கவும் கூடாது. குறிப்பாக "தீட்டு" விஷயம் இடத்திற்கு இடம்,சூத்திரத்திற்கு சூத்திரம், மாறுபடலாம். சந்தேகம் ஏற்பட்டால் உங்களது சாஸ்திரிகளின் உதவியை நாடவும்.

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...