Monday, December 1, 2025

பக்தி - பட்டினத்தடிகள் - Pattinathadigal

 பட்டினத்தடிகள் - Pattinathadigal
---------------------------

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி 11-ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.


ஞானம் பிறந்த கதை
 சிவநேசர்: ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார்சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்றுவர அனுப்பினார். அவனோ திரும்பி வரும்போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.


பட்டினத்தடிகள்
 அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகிவிட்டு "தன்வினை தன்னைச் சுடும்! வீட்டப்பம் ஓட்டைச் சுடும்" ன்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்றுவிட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.


அன்னையின் ஈமச் சடங்கு
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற
போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை
தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு
நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து
பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் வட்டிலிலும்
தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக்
காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் நொந்து சுமந்து பெற்று நோவாமல்
ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல் கையிலே
கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து
மகிழாமல் உருசியுள்ள தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ மானே
எனஅழைத்த வாய்க்கு அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள முகமேல் முகம்வைத்து
முத்தாடி என்றன் மகனே எனஅழைத்த வாய்க்கு முன்னை இட்ட தீ
முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ
அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்கமூள்கவே வேகுதே தீயதனில் வெந்து
பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல்
கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை வெந்தாளோ சோணகிரி
வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த
தாய் வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள்
இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க எல்லோரும் வாருங்கள் ஏதென்று
இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்

பத்திரகிரியார் தொடர்பு பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைதுசெய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.

பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள் : சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்துவிட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

கோயில் நான்மணி மாலை
திருக்கழுமலை முமணிக்கோவை
திருவிடைமருதூர் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும். எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம். இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தாம் மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப் பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை பித்தானால் என்செய்வாள் பின் ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு நெஞ்சே உனக்குபதேசம் இதே... நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

திருவொற்றியூரில் சமாதி தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் பட்டினத்தார். சென்னையில் இருப்பவர்களுக்கே நிறைய பேருக்கு இவரின் சமாதி சென்னையில் திருவெற்றியூரில் அமைந்திருப்பது தெரியாது. கடலை ஓட்டி அமைந்துள்ள சாலையில் கடலை பார்த்தபடி இருக்கிறார் பட்டினத்தார். இவரின் இயற்பெயர் திருவென்காடார். செல்வ செழிப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர். மனைவி பெயர் சிவகலை. இருவருக்கும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட, சிவ பக்தர் ஒருவர் கோயிலில் கண்டு எடுத்ததாக கூறி ஒரு குழந்தையை இவர்களிடம் ஒப்படைக்கிறார். ஆசையோடு வளர்த்த குழந்தை இளைஞன் ஆகி கடல் கடந்து பொருள் ஈட்ட செல்கிறான். அவன் வரும்பொழுது வெறும் எரு வரட்டி மூடை மூடையாக கொண்டு வருகிறான். திருவென்காடார் அவனை திட்டி அனுப்பி விடுகிறார். வீட்டிற்கு வந்தால் பையன் அவன் அம்மாவிடம் கொடுத்த ஒரு சிறு பெட்டி இருக்கிறது. உள்ளே ஒரு உடைந்த ஊசியும், பிறப்பிலிருந்து ஓலையும் இருக்கிறது. ஓலையில் ”காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டுள்ளது.

இயற்கையின் விளையாட்டை புரிந்துகொள்ள முடியாத இடம் இதுதான். செல்வ சிறப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர் கண்டிப்பாக இதைவிட பெரும் தத்துவங்களை படித்திருப்பார். ஆனால் அவருடைய “ப்ரேகிங் பாயிண்ட்” இருந்தது அந்த ஒத்தை வரியில்.எல்லா சுகங்களையும் குடுத்து பின் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டால் ஒரு அதிர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் தகுதி இருந்தும் வழிக்கு வராத சிஷ்யனை ஒரு குரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தே தேடலுக்கு வழி வகுப்பார். இங்கே இறைவன் அந்த வேலையை செய்தார் . கடைசி அடியாக அந்த ஒத்தை வரி.ஞானம் பிறந்தது. துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பரதேசி ஆகிவிடுகிறார். தேடல் ஆரம்பித்தது. பரதேசியான தம்பியை கண்டு அவமானம் அடைந்த சகோதரி அப்பதில் விஷம் கலந்து குடுகிறாள். “தன் வினை தன்னைச்சுடும், வீட்டப்பம் ஓட்டை சுடும்” என்று கூறி அப்பத்தை கூரையில் எறிய, அந்த வீடு தீப்பிடித்து எரிகிறது. தகுதி உள்ள சீடன், தன் குருவை எப்படியேனும் அடைந்தே தீருவான். உங்களுக்கான நேரம் வரும் பொழுது உங்கள் குரு உங்கள் முன் தோன்றுவார், எவ்வடிவதிலும். இயற்கை இடும் இந்த புதிரையும் புரிந்து கொள்வது கடினம். நுட்பமானது. அரசியின் நகையை திருடியதாக கைது செய்யப்பட்டு அரசன் முன் நிறுத்தப்படுகிறார் பட்டினத்தார். அவரை கழு மரத்தில் ஏற்ற சொல்கிறான் அரசன். மரம் தீபிடித்து எரிகிறது. அரசன் தன் குருவை கண்டுகொண்டான். குரு சீடன் சந்திப்புக்கு அங்கே அரசியின் நகை களவு ஒரு மீடியம், அவ்வளவுதான். பின்பு அந்த அரசன் பத்ரகிரியார் ஆகி, தன் குருவையே மிஞ்சும் சீடன் ஆகிறான். (இவரின் கதையை தனி பதிவாக இடலாம்). குருவுக்கு முன்பே சீடன் முக்தி அடைந்துவிட, பட்டினத்தார் ஊர் ஊராக சுற்றுகிறார்.

இடையில் அவரின் அன்னை மரண படுக்கையில் இருக்கும் சேதி கேட்டு அவரை காண வருகிறார். இந்நாட்டில் அன்னைக்கு இருக்கும் மரியாதை போல் வேறு எங்கும் இல்லை. முற்றும் துறந்த முனிவரான ஆதி சங்கரர் ஆனாலும் பரதேசியான பட்டினத்தார் ஆனாலும் அல்லது சமகால ஞானியான ரமண மகரிஷி ஆனாலும் தன் அன்னைக்கே முதலிடம் அளித்து உள்ளார்கள். இப்பொழுது இங்கேதான் முதியோர் இல்லமும் அதிகரிக்கிறது. மரணித்துவிட்ட அன்னையை கண்டு அழுது புலம்பி பட்டினத்தார் இயற்றிய பாடல்கள் தமிழும், கடைசி அன்னையும் மக்களும் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும். முக்திக்காக ஏங்கி திரியும் பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனிக்கும் இடத்தில முக்தி கிடைக்கும் என்று இறை சக்தியால் உணர்த்தப்படுகிறது. கரும்பில் பேய் கரும்பு என்ற வகை இனிப்பட்றது . திருவற்றியூர் வந்த இடத்தில பேய் கரும்பு இனிக்கிறது. இந்த இடத்தில தான் தன் உடம்பை விடவேண்டும் என்று அவருக்கு புரிகிறது. ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைகப்படும். கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன. ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது. போலவே பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய பட்டினத்தார் அந்த கூடை குள்ளிருந்தே மறைந்து போனார். அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம் இருந்தது. அதுவே திருவெற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோயில்.

பட்டினத்து அடிகள் வரலாறு பதினொன்றாம் திருமுறையில் கோயில் நான்மணி மாலை முதலான ஐந்து பிரபந்தங்களை அருளியவர் பட்டினத்து அடிகள் ஆவார். திருவெண்காடர், திருவெண்காட்டு அடிகள், பட்டினத்துப் பிள்ளையார் எனவும் இவர் தம் பெயர் வழங்கப்பெறும். அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் செழுங்குடியில் தோன்றி மனைத்தக்க மாண்புடைய மனைவியை மணந்து இல்லறம் இயற்றி வந்த இவர் பிறவி நோய்க்குக் காரணமான ஆசையை அறவே விட்டொழித்துத் துறவறம் பூண்டு உயர்ந்தவர்.

பாரனைத்தும் பொய்யெனவே
பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது

எனத் தாயுமானவரால் போற்றப்பெறும் இவர்பெயர் துறவறநெறியில் நின்றார்க்கே சிறப்பாக உரிய அடிகள் என்ற சொல்லோடு இணைத்து வழங்கப்பெறும். பட்டினத்துப் பிள்ளையார் புராணம் தில்லையில் வாழ்ந்த இவர் மரபினராய வணிகர் சிலர் வேண்டுகோட்படி இப்புராணம் பிற்காலப்புலவர் ஒருவரால் எழுதப் பெற்றது. இப்புராணத்துட் கூறப்படும் வரலாறும், புலவர் புராணம் முதலியவற்றுட் கூறப்பெறும் வரலாறுகளுமே பெருவழக்கிலுள்ள பட்டினத்தார் வரலாறாக இன்று வழங்கி வருகின்றன. இவ்வரலாறுகளில் சில செய்திகள் புனைவாகக் கருதப்படுகின்றன.

வரலாறு காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய்சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது. சிவசருமர் திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய சிவசருமர் என்னும் அந்தணர் வறுமையால் துயருறுவதைக்கண்டு மனம் பொறாத மகாலிங்கப் பெருமான் மருதவாணர் என்னும் திருப் பெயரோடு அவர்முன் தோன்றி காவிரிப்பூம்பட்டினத்தில் மகப் பேறின்றி வருந்தும் திருவெண்காடரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குமாறு கூறியருளினார்.

சிவசருமர் இறைவன் கட்டளைப்படி மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணரை அளித்துப் பொருள் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார்.

கடல் வாணிபம் திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எருமூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

வரட்டியும் தவிடும் வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்தபோது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார்.

காதற்ற ஊசி சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத்துடன் தனி அறையில் பூட்டி வைக்கச்செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கேஎன்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார். திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியனவும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவியபோது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

தன்வினை தன்னைச்சுடும் பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கியிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதபிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார். பின்னர் சீகாழி சிதம்பரம் கச்சி ஏகம்பம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் சென்றார்.

சிவசமாதி திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்தபோது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

பிற்கால வரலாறு இனிப் பட்டினத்து அடிகள் வரலாற்றில் மேலும் சில செய்திகள் சேர்ந்து வழங்கக் காணலாம். மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப்பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார். ஒருநாள் சிவபிரான் இவர் கனவில் அந்தணராகத் தோன்றி திருவெண்காடு வருமாறு பணிக்க அவ்வாறே திருவெண்காடர் திருவெண்காடு சென்றபோது கனவிடைத் தோன்றிய அந்தணர் காட்சி தந்து சிவதீட்சை வழங்கி அவர் கையில் ஒரு சம்புடத்தைக் கொடுத்து மறைந்தருளினார். சம்புடம் இவர் கைக்குக் கிடைத்தவுடன் தானே திறந்து கொண்டது. அதில் விநாயகர் சிவலிங்கம் இருக்கக் கண்டு திருவெண்காடர் நாள்தோறும் அவற்றைப் பூசித்து வந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு வாய்க்காமையால் இறைவனை வேண்டி வந்தார்.

எடைக்கு எடை பொன் திருவிடைமருதூரில் தன்னை வழிபட்டுச் சிவதருமங்கள் பலசெய்து வந்த அந்தணராகிய சிவசருமர் சுசீலை ஆகியோர் வறுமை நிலையில் இருப்பதை உணர்ந்து மகாலிங்கப் பெருமான் அவர்கள் கனவில் தோன்றி, நாளை தீர்த்தக் கரையில் மருத மரத்தடியில் நாமே ஒரு குழந்தையாய் இருப்போம். அக்குழந்தையைக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் வணிகராகிய திருவெண்காடரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன் பெற்று வறுமையின்றி வாழ்க என அருள்புரிந்தார். விழித்தெழுந்த சிவசருமரும் சுசீலையும் அக்குழந்தையை எடுத்து அணைத்து அதனைக் கொடுக்க மனம் இன்றி முடிவில் இறைவன் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்து திருவெண்காடரிடம் அளித்து எடைக்கு எடை பொன் பெற்று மீண்டனர்.

மருதப்பிரான் திருவெண்காடர் அக்குழந்தைக்கு மருதப்பிரான் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்தார். மருதப்பிரான் கல்வி கேள்விகளில் வல்லவராய் வாணிபத்தில் சிறந்து விளங்கினார். வணிகர் சிலரோடு கடல் வாணிபம் சென்று மீண்டார். தான் கொண்டு சென்ற கப்பலில் எரு மூட்டைகளையும் தவிட்டையும் கொண்டு வந்த தம் மைந்தரைத் தேடியபோது அவர் மனைவியார் மைந்தர் தம்மிடம் கொடுத்துத் தந்தையிடம் சேர்ப்பிக்குமாறு கூறிய பெட்டியில் நிலையாமை உணர்த்தும் பொருள்களும் அறவுரையும் இருக்கக்கண்டு உண்மை ஞானம் கைவரப் பெற்றுத் துறவறம் பூண்டார். தம் தலைமைக் கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது கருவூலத்தைத் திறந்து வைத்துப் பலரும் கொள்ளை கொள்ளுமாறு செய்தார். தன்னைக் கொல்லத் திட்டமிட்ட உறவினர்க்குத் தக்க பாடம் புகட்டினார். தாயார் இறந்தபோது வாழைப் பட்டைகளை அடுக்கித் தாயின் உடலை அதன் மீது வைத்துச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் அவ்வுடலை எரித்து ஈமக்கடன்களை ஆற்றி முடித்துப் பலசிவ தலங்களையும் வழி பட்டுக் கொண்டு உஜ்ஜயினியை அடைந்து அவ்வூரின் புறத்தே இருந்த சிறு காட்டில் விநாயகர் ஆலயத்தில் தங்கித் தவ நிலையில் இருந்தார்.

பத்திரகிரியார் இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்கு வருந்தி `என் செயலாவது யாதொன்றுமில்லை" என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த பத்திரகிரி மன்னன் அடிகளை அடைந்து பிழை பொறுக்குமாறு வேண்டியதோடு தானும் அரசு துறந்து அடிகளைப் பணிய பத்திரகிரியாரைத் திருவிடைமருதூர் சென்று கோபுர வாயிலில் தங்கியிருக்குமாறு செய்து அங்கிருந்து புறப்பட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பத்திரகிரியார் கையில் திருவோடு ஒன்றை ஏந்தி இரந்துண்டு திருவிடைமருதூர்க் கோயிலில் தங்கியிருந்தார். பட்டினத்து அடிகள் பல தலங்களுக்கும் சென்று பின் திருவிடைமருதூரை அடைந்து பத்திரகிரியாரை மேலைக்கோபுர வாயிலில் இருக்கச் செய்து தான் கீழைக் கோபுர வாயிலில் இருந்தார். பத்திரகிரியார் பலர் இல்லங்கட்கும் சென்று இரந்து வந்து தன் குருநாதர்க்கு அமுதளித்து எஞ்சியதைத் தான் உண்டு மீதத்தைத் தன்னைத் தொடர்ந்து வந்த நாய் ஒன்றிற்கு அளித்து மேலைக் கோபுர வாயிலில் இருந்தார்.

குடும்பி ஒருநாள் சிவபெருமான் சித்தராக வந்து பட்டினத்து அடிகளிடம் உணவு வேண்ட அடிகள் "யான் கந்தையும் மிகை" என்னும் கருத்தோடு வாழும் துறவி, என்பால் ஏதுவும் இல்லை. மேலைக்கோபுர வாயிலில் ஒரு குடும்பி உள்ளான். அவனிடம் சென்று கேளும் எனக்கூற, சித்தர் அவ்வாறே சென்று அடிகள் கூறியனவற்றைத் தெரிவித்துக் கேட்ட அளவில் பத்திரகிரியார் நம்மோடு இணைந்துள்ள உணவேற்கும் ஓடும் பரிவு காட்டும் நாயும் அல்லவா நம்மைக் கும்பியாக்கின என அவ்வோட்டை கீழே எறிய ஓடு உடைந்து சிதறியது. நாயின்மீதுபட்டு நாயும் இறந்தது. சித்தர் மறைந்தார். நாய் அடியார் பரிகலம் உண்ட சிறப்பால் காசிராசன் மகளாகச் சென்று பிறந்தது.

பரிகலச் சிறப்பு சில ஆண்டுகளுக்கு பின் அப்பெண் தந்தையோடு திருவிடைமருதூர் வந்து பத்திரகிரியாரைப் பணிந்து "அடிநாய் மீண்டும் திருவடிப்பேற்றுக்கு வந்துள்ளது எனக்கூற பத்திரகிரியார் அப்பெண்ணை பட்டினத்து அடிகளிடம் அழைத்து வந்து ஞானிகளின் பரிகலம் உண்ட சிறப்பால் அரச மரபில் பிறந்து வளர்ந்துள்ள இப்பெண்ணுக்கு வீடுபேறு அருளுமாறு வேண்ட அங்கு ஒரு சிவசோதி தோன்றியது. அப்பெண் அச்சோதியில் கலந்து வீடு பெற்றார். பத்திரகிரியாரும் குருநாதர் ஆணைப்படி அச்சோதியில் கலந்து இறையடிப் பேற்றை எய்தினார். அடிகள் இறைவன் கருணையை வியந்து "என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்" என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக்கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார். அடிகள் இறைவன் அருளியவாறு திருவொற்றியூரை அடைந்தார். அங்கு சிலநாள் தங்கினார். கடற்கரையில் இடைச் சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் கொண்ட கரும்பு இனிக்கத் தொடங்கியது. பட்டினத்து அடிகள் இறைவன் திருவருளை எண்ணிய நிலையில் அத்தலத்தில் மணலில் மறைந்து சிவலிங்கத் திருவுருவாய் வெளிப்பட்டருளினார்.

பட்டினத்து அடிகள் காலம் கி.பி 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.  நூல்கள் பட்டினத்து அடிகள் பாடியனவாக பதினொன்றாம் திருமுறைப் பிரபந்தங்களையன்றி வேறுபல பாடல்களுடன் வெளிவந்துள்ள பட்டினத்தார் பாடல் என்ற நூல் பிற்காலப் புலவர் சிலரால் பாடித் தொகுக்கப்பட்டது. இந்நூலில் உள்ள பிரபந்தப் பாடல்கள் உயர்ந்த நடையில் விளங்குதலையும், அந்நூற் பாடல்கள் சாதாரண மக்கள் வழக்கில் பாடப் பட்டிருத்தலையும் சுட்டிக்காட்டி பட்டினத்தார் பாடல்கள் என வழங்கும் நூல் பிற்காலப் புலவர் ஒருவரால் செய்யப் பெற்று அடிகள் பெயரில் வழங்கப்படுவதாகும் என ஆய்வறிஞர்கள் கருதுவர்.

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே
 
அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே
 
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க!
 
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்:
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
 
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன
 
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன்! கச்சியேகம்பனே!
 
 
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சியேகம்பனே!
 
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!
 
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே!
 
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே!
 
கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே!
 
ஊரிருந்தென்ன? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே!

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...