"சோனாச்சலம் எனும் அண்ணாமலை"
-----------------------------------------
- · பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.
- · ஆறு ஆதாலத் தலங்களில்
திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது.
- ·இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
- ·சோணாசலம், அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் இத்தலத்தைக் குறிப்பவையே.
ஒருமுறை பிரம்மாவிற்கும், மஹாவிஷ்ணுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார். (சிவலிங்கம் என்றால் இறைவனைக் குறிக்கும் குறியீடு என்று பொருள்.) லிங்க உத்பவம் (சிவலிங்கத்தின் தோற்றம்) நடைபெற்ற தலம் இது. திருஞானசம்பந்தர் பதிகங்களில் ஒன்பதாம் பாடல் தோறும் அடிமுடி தேடிய இந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.தமிழில், அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் அளக்க முடியாத வடிவாகத் தோன்றிய சிவபெருமானின் மலை என்பதால் அண்ணாமலை எனப் பெயர் வந்தது.வடமொழியில், அருணம் என்றால் சிவப்பு. அசலம் என்றால் மலை. சிவந்த நெருப்பு வடிவில் தோன்றிய மலை என்பதால் அருணாசலம் எனப் பெயர் பெற்றது. அண்ணாமலையானது கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.
உமையம்மை இங்கு தவம் இருந்து சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகம் பெற்றார் சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலையில் வச்சிராங்கத பாண்டியன் குதிரை மீதேறி பூனையைத் துரத்திவர திருவண்ணாமலையை வலம் வந்து இரண்டும் இச்சாபம் நீங்கி வித்தியாதரர்களாயினர். வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம் வந்து திருப்பணி பல செய்துள்ளான்.
· நினைத்தாலே முக்தி தரும் தலம்
திருவண்ணாமலை.
· இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
· மலைவலம் (கிரிவலம்) இங்குச்
சிறப்புடையது.
· இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர்.
· பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது
மிகவும் சிறப்பு.
· மலைவலம் சுற்றி வரும்போது எட்டு
திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் காணலாம். அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம்,
அக்னி லிங்கம்,
யமலிங்கம்,
நிருதி லிங்கம்,
வருண லிங்கம்,
வாயு லிங்கம்,
குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.
· உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் -
அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.
· திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும்.
· வெளிச்சுற்று மதிலில் திசைக்கு
ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம்
பிரகாரத்தில் இருந்து 3-ம்
பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும்
கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம்
திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2-வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம்
கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும்,
மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம்
என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி
அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.
·
கிழக்கு கோபுரத்தில் நடனக்
கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
·
கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி
விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.
·
திருவண்ணாமலையார் கோயிலில்
அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.
·
அருணகிரிநாதரின் வாழ்வில் அருள்
திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.
·
ரமண மகரிஷி தவம் இருந்து அருள்
பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது)
·
உள்ளே சென்றால் கம்பத்திளையனார்
சந்நிதியும், ஞானப்பால்
மண்டபமும் உள்ளன. ”லசேடனாராட”
என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில்
வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.
·
விசுவாமித்திரர் பதஞ்சலி, வியாக்ரபாதர்,
அகத்தியர்,
சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள்
உள்ளன.
·
சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன
மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான
தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்.
·
மூலவர் - அருணாசலப் பெருமான்,
தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி
நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.
·
சதுர்முக லிங்கம் இங்கு உள்ளது.
·
25 ஏக்கர்
நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
·
(திருவாசகத்தில்) திருவம்மானை,
திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு எழுப்பிச்
சென்றதை அடிப்படையாகக் கொண்டது.
·
தலபுராணம் - அருணாசல புராணம்,
அருணைக் கலம்பகம்,
சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.
·
“அண்ணாமலை வெண்பா”
குருநமசிவாயர் பாடியது.
·
குருநாமசிவாயர்,
குகைநமசிவாயர்,
அருணகிரியார்,
விருபாக்ஷதேவர்,
ஈசான்ய ஞானதேசிகர்,
தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில்
வாழ்ந்த அருளாளர்கள். இவர்களுள்
பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர்
என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று,
இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து
கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை
ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்.
அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்'
என்று வழங்கப்பட்டு வருகின்றது.
கார்த்திகை தீபத் திருவிழா
----------------------------------
கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம்
கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா. சிவபெருமான் கார்த்திகை
மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா
இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே கார்த்திகை
தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. பரணி அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில்
ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி
பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.
பரம்பொருளாக ஒருவரான சிவபெருமான், எல்லா
உயிர்கள் / பொருட்களிலும் நீக்கமற நிற்கிறார் என்பதே இந்நிகழ்ச்சியின்
உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில்
கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது
மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம்
ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்
அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில்
மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை
விட்டு வருவதில்லை. மலைமேல் மகா தீபம் 11
நாட்கள் எரியும்.
·
திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றும்
உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள். தீப விழாவன்று ஆலயத்தார் இவர்களை கவுரவித்து மலைமேல் தீபம் ஏற்றும்
பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள்.
·
மகாதீப தரிசனம் கண்டால்,
அவர்களின் 21 தலைமுறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
·
தத்துவார்த்தமாக,
மனம், மொழி, மெய்களை
கடந்து ஓருருவம் ஒரு பெயரும் இல்லாத இறைவன்,
உயிர்களை உய்விக்கும் பொருட்டு ஜோதி
ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது. அந்த ஜோதியே உயிர்களின் மீது கொண்ட கருணையினால்
சக்தி தன்னில் தோன்ற உலகைப் படைக்கிறது. அவ்வாறு படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளிலும்
உயிரிலும் அந்தப் பரம்பொருள் நீக்கமற நிறைகிறது. (அஷ்டமூர்த்தி தத்துவம்). இதனை
இந்தக் கார்த்திகை தீபத் திருவிழா நமக்கு உணர்த்துக்கிறது.
வழிபட்டோர் : சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், உமை, முருகன், புளகாதிபன், விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தார், சேக்கிழார், இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், அம்மணியம்மாள், சைவ எல்லப்பநாவலர் போன்ற எண்ணற்ற தேவர், முனிவர், சித்தர்கள், அடியார் பெருமக்கள்.
No comments:
Post a Comment