Thirupugazh - திருப்புகழ்
1. நாத விந்து கலாதி - பழனித் திருப்புகழ்
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே!
2. திருமகள் உலாவும் - கதிர்காம ஈழத்
திருப்புகழ்
திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!
செக தலமும் வானும், மிகுதிபெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!
மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!
அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!!
இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!
இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு தன விநோதப் பெருமாளே!!
3. தமரும் அமரும் - பழனித்
திருப்புகழ்
தமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவும் இருபாதம்
கருத அருளி எனது தனிமை
கழிய அறிவு தர வேணும்!
குமர சமர முருக பரம
குலவு பழனி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா!
அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர்செய்து அருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும்
அழகும் உடைய பெருமாளே!
4. அபகார நிந்தை - பழனித் திருப்புகழ்
அபகார நிந்தை பட்டு உழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநான் நினைந்தருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக்கு இளையோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
செபமாலை தந்த சற் குருநாதா
திருவாவி நன்குடிப் பெருமாளே!
5. அல்லி விழியாலும் - வள்ளிமலைத்
திருப்புகழ்
அல்லி விழியாலும் முல்லை நகையாலும்
அல்லல்பட ஆசைக் கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ள வினையார் அத் தனம் ஆரும்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளி எனதுஆவி கொள்ளை கொளும் நாளில்
உய்ய ஒரு நீ பொற்கழல் தாராய்!
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்
சொல்லும் உபதேசக் குருநாதா
துள்ளி விளையாடு புள்ளி உழை நாண
எள்ளி வனம் மீதுற்று உறைவோனே
வல்
அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லை வடிவேலைத் தொடுவோனே
வள்ளி படர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளி மணவாளப் பெருமாளே!
6. ஏறுமயில் ஏறி - திருவண்ணாமலைத் திருப்புகழ் (பொதுப் பாடல், தலப் பாடல் அல்ல)
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
No comments:
Post a Comment